பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

39



கண்டனர். அவள் விழிகள் செவி மருங்கு ஓடின. காதில் அணிந்திருந்த நித்திலப் பொன் தோட்டினை அவை நீல நிறமாக மாற்றிவிட்டன. அவள் விழிகள் அவர்களை மயக்கின. அவர்களை நாடி அவள் வந்தாள் என்று கூற முடியாது; அவர்கள் சித்தம் இழந்தவராய் அவளை நோக்கினர். அவர்கள் மனம் அவர்களிடம் நில்லாமல் அவளிடம் ஒடிச் சென்றது. பந்தற்கீழ் வந்து அவள் நின்றாள். அவளை அவர்கள் முழு வடிவில் காண முடிந்தது.

அவர்களைப் பார்க்க அவாவினர்; இந்தத் தோழிகள் அவளைச் சூழ்ந்து நின்றனர்; இவர்கள் வேலிபோல் அவளை வளைத்துக் கொண்டிருந்தனர். எங்கும் சேலை; இடைவெளி இன்றி அவர்களே அவளை நெருங்கிச் சூழ்ந்தனர். இடுக்கில் அவர்கள் பார்வை சென்று மிடுக்குடைய நங்கையை இடை இட்டுக் கண்டனர். தெய்வ தரிசனம் பக்தர்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை; அர்ச்சகர்களே தடுத்து விட்டனர்.

அவளைப் பார்த்ததிலே மனம் நிறைவு பெற்றவர் பலர்; பேரழகி என்று பேசக் கேட்டவர்கள் அவளை நேரில் கண்டது பெறற்கரும் பேறு எனக் கொண்டனர்.

அவர்கள் விழித்துக் கண் மூடினார்களா தெரிய வில்லை. தாமரை பூத்த மண்டபமாக அது விளங்கியது. அது ஒரு பொய்கையா மண்டபமா என வேறுபாடு காணவே முடியவில்லை. இவள் அன்னமென நடந்தாள். தாமரை பூத்த பொய்கையில் அன்னம் நடப்பது போல் தோன்றியது.

தமயந்தி அவள் உடுத்திய சீரை அவளை அன்னம் எனப் பேச வைத்தது. தாளுக்குப் பூசிய செம்பஞ்சுக் குழம்பு அன்னத்தின் சிவந்த தாளை நினைப்பூட்டியது. ஒர் அழகிய ஒவியம்; அங்கே நீலநிறக் கண்கள்; நித்திலத் தோடு அணிந்த நங்கை, அன்ன நடை பொன் ஒளிர் மேனியாள்;