பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

45



பேசப்பட்டவர்கள் வெண்தாமரை என மாற்றப்பட்டனர். உலகம் அவ் இளைஞனை வாழ்த்தியது; பொருத்தம் என்று பேசினர். பிழை நடக்கவில்லை, பெருமை பெற்றாள் என்று பேசினர்.

மாலை தாங்கிய மன்னன் நளன் தன் காதலியுடன் செம்மாந்து நடந்தான்; வாழ்த்தொலிகள் அங்கு அம் மண்டபத்தில் எதிர் ஒலித்தன. அவர்கள் ஊர்வலமாக நடந்து சென்றனர். நகர்வலம் வந்தனர். மடநாகுடன் செல்லும் மழவிடைபோல் தமயந்தி அவனுடன் நடந்தாள். காளை எருதுடன் இளம்பசு உடன் செல்வதுபோல் இருந்தது. பொன் மாலை பெற்ற தோளோடும் அவன் புறப்பட்டான்.

சுயம் வரம் முடிந்தது; விழா இனிது நடைபெற்றது; நாட்டில் எங்கும் மகிழ்ச்சி நிலவியது. காதல் இருவர் ஒன்று சேர்ந்தனர். களி மகிழ்வு கண்டனர்.

சுந்தரியை மணக்க அந்தரத்தில் இருந்து வந்த இந்திரன் தன் பொன்னாடு திரும்பினான். அவன் சென்ற வேகத்தைக் கண்ட மற்றைய தேவர்கள் அவன் மணமாலை தாங்கி வருவான் என்று எதிர்பார்த்தனர். பொன்னாடு எங்கும் விழா எடுத்துக் கொண்டாட நினைத்தனர். வரவேற்புகள் அவனுக்காகக் காத்து இருந்தன.

குட்டி தேவதைகளுள் ஒருவன் சனியன்; அவனை ஈசுவரன் என்று கூறி அஞ்சினர். அவன் யாரையாவது பிடித்துக் கொண்டால் இலேசில் விட்டுச் செல்ல மாட்டான் என்ற புகழைப் பெற்றவன்; குறைந்தது ஏழரை ஆண்டுகள் அவன் ஆட்டி வைப்பான் என்று நம்பினர்.

தீமைகள் தொடர்ந்தால் அதற்குக் கர்த்தாவே அவன்தான் என்று பேசும் பெருமையைப் பெற்றிருந்தான். அவனைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். தன்னைப் பற்றாமல் இருக்க அவனை வழிபட்டனர்.