பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

49



அவள் புன்முறுவல் கண்டு மனம் புண்பட்ட மன்னர் பலர்; அவள் பேரழகு அவர்களுக்குப் பெருத்த வருத்தத்தைத் தந்தது. ‘பொன் அழகு அது வெளியில் வைத்தால் அது பிறர் கண்படும்; அவர் நெஞ்சு புண்படும். அதைப் புதைத்து வைப்பதே செய்யத் தக்கது என்பது போல் புனைவுகள் கொண்டு அவள் மேனியைப் பூட்டி வைத்தனர். அணிகள் பல அணிவித்தனர். அவ்வாறே மலர் கொண்டு அவள் கூந்தலை மறைத்தனர். ‘மிக்க அழகு” அதைப் பாதுகாக்க இந்த அரண்கள் தேவைப்பட்டன.

ஆசிகள் பெற மணவிழா நடைபெற்றது. இனி அவர்கள் அன்றில் பறவைகள்; அவர்களை யாரும் பிரிக்கவே முடியாது. வீமன் மகள் நேற்றுவரை, இன்று காமன் கைப்பிள்ளை; நளனின் வாழ்க்கைத் துணைவி; இணைப்பு அவர்கள் பிணைப்பு.

சேடியர்கள் அவர்களைத் தனியறையில் விட்டனர். குற்றேவல் பல செய்து அந்த அறையை அழகு செய்தனர். மஞ்சத்தில் மலர்கள் பரப்பி அவர்கள் கொஞ்சி மகிழ வழி செய்தனர்; வகுத்துத் தந்தனர்.

காமன் தன் மலரம்பு தொடுத்தான்; அவள் தோள்களைத் துளைத்தான்; அவள் கொங்கைகளில் எய்தான்; இருவரும் கிளர்ச்சி பெற்றனர். முன்பின் பழகாதவர்; பார்த்து அறியாதவர்; பேசி மகிழ்ந்தனர். கூசி ஒதுங்கியவர்கள் உள்ளத்தால் ஒன்றுபட்டனர்; உடலால் ஒன்றுபட மாரன் மலர் அம்புகளைத் தொடுத்தான் இருவரையும் இணைத்தான்.

அரவுகள் பிணைவது போல் அவர்கள் இணைவு கண்டனர். இருவர் என்று உள் நுழைந்தவர். அவர்கள் மாறி ஒருவர் ஆயினர் என்று கூறும்படி ஒருவரை ஒருவர் தழுவினர்; அணைந்தனர். பின் இணைந்தனர்; இன்பத்தில் ஆழ்ந்தனர்.