பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

புகழேந்தி நளன் கதை


யாகிறது. தன் கண்ணைப்போலவே அவை விளங்கியதால் பறிக்க மனம் இல்லாமல் நின்று விடுகிறாள். இப்படியும் ஒரு பெண் இருக்கிறாள் என இவன் செப்புவது கேட்டு அவளும் மகிழ்வு அடைந்தாள். பேதைப் பெண் அவள் என்று இரக்கம் காட்டினாள். நீல விழிகள் பெண்களுக்குக் கோல அழகு தருகிறது என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசினான்.

மகளிர் முகம் மதி; தாமரை என்று பேசினான். கண்கள் குவளை என்றான். கைவிரல்கள் காந்தள் முகை என்றான். கண்கள் கருங்குவளை என்றான். காதல் நெஞ்சம் இத்தகையது என்று அக்காட்சிகளைக் காட்டி உணர்த்தினான்.

அவர்கள் வழி நெடுகச் சோலைகளையும் பொய்கைகளையும் கண்டு மகிழ்ந்தனர். அங்குக் காதல் புரிந்த இளைஞர்களைக்கண்டு அவர்கள் செய்கைகளில் புதுச்சுவை கண்டனர்.

மற்றும் அங்கே தங்கி இளைப்பாறினர். களைப்பு நீங்கக் குளத்திலும் ஆற்றிலும் நீராடி மகிழ்ந்தனர். கங்கை நதி அவர்களைக் கவர்ந்தது. அதில் நீராடி மகிழ்வது சிந்தைக்கு இனிமை தந்தது. புனிதம் மிக்கது என்பது மட்டும் அல்ல; வெள்ளம் மிக்கது; குளிர்ச்சி தந்தது. அலைகள் அவர்களை அழைத்தன. அதில் நீராடிக்கரை ஏறினர்.

அங்கே ஒரு பூ மரச் சோலை; அதனை இளமரச் சோலை என்றனர். அதைக் கண்டு தமயந்தி வியந்தாள். பூவும் தளிரும் எழில் மிக்கவையாகக் காட்சி அளித்தன. மகளிர் தம் காதலருடன் களித்து மகிழ்ந்தனர். இளம் மங்கையர் அங்கும் இங்கும் திரிந்து அழகு சேர்த்தனர்.

இவன் வாய் வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம். அந்தச் சோலையை அவன் பாராட்டினான்.