பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

55


இதுபோல் தன் நாட்டிலும் சோலைகள் உள்ளன. அங்குத்தான் தான் ஆடி மகிழ்வது உண்டு என்று கூறினான்.

“இந்தப் பொழில் எங்கள் எழில் நகரில் உள்ள சோலையைப் போல் உள்ளது” என்று அவளிடம் பேசுவதற்கு இதனை ஒர் வாய்ப்பாகக் கொண்டான். அவள் புன்முறுவல் பூப்பாள் என்று எதிர்பார்த்தான்.

அவள் கற்பனை எங்கோ சென்றுவிடுகிறது. இந்த இளைஞர்கள் தம் காதலியரைச் சந்தித்துக் கலந்து உரையாடும் கலகலப்பு அவளுக்குச் சிலிர் சிலிப்பை உண்டு பண்ணியது.

நளனை அழகிய மகளிருடன் வைத்துப் பார்த்தாள். அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “கோட்டுப்பூச் சூடினும் காயும்” நிலையை அடைந்தாள். “நீர் யாரை ஒப்பிட்டுப் புனைகின்றீர்” என்று கேட்பது போன்ற நினைவு எழுந்தது.

“அப்படி என்றால் நீயும் இளமகளிருடன் வளமுடன் உரையாடி மகிழ்ந்தீரா?” என்று கேட்டாள். தொடர்ந்து பிணக்குக் கொண்டாள். அவள் முறுக்கு மாற்ற வேண்டியது; அவள் சிணுக்கு அது; தான் சறுக்கவில்லை என்று சொல்லிப் பார்த்தான்.

அப்பு அழுக்கு இல்லாத வாழ்க்கை என்று செப்பிப் பார்த்தான். அவள் ஒப்புக் கொள்வதாக இல்லை.

அணைக்கச் சென்றான் அவன்; அவள் இணக்கம் காட்டவில்லை; சினந்தாள்; கண் சிவந்தாள்.

“வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல” என்பதை அறிந்தான். ஊடல் தீர்வதற்கு ஒரே மருந்து அவள் காலில் விழுந்து மன்றாடுவது. கொஞ்சுவதற்கு வழி அவளைக் கெஞ்சுவதுதான். அப்பொழுதுதான் அவள் மிஞ்சுவதைத் தவிர்க்க முடியும் என்று கொண்டான்.