பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

புகழேந்தி நளன் கதை


அவள் காற்சிலம்பு அதனைத் தன் முடி மீது வைத்தான்; சீறடியைத் தொட்டு அதனைத் தன் மணிமுடி மீது வைத்தான். பேரிடி மாறியது; சிவப்பு நீலம் ஆகியது. அவள் சிவந்த கண்களின் சினக்குறிப்பு மாறியது. அவள் கண்கள் நீலநிறம் பெற்றன. பழைய கருங்குவளையை வளையல் அணிந்த அந்த இளைஞியிடம் கண்டான்; உறவு கொண்டான்.

ஊடல் தீர்ந்தது; கூடி மகிழ்ந்தான்; அவள் அவன் விருப்புக்கு உடன்பட்டாள். அவன் மார்பு அவள் உழும் நிலம் ஆயிற்று; கொங்கை ஏர் பூட்டிக் குறுவியர் நீர் அங்கு அடைத்துக் காதல் என்னும் வரப்பினை அமைத்து அவள் காமப் பயிர் விளைவித்தாள். அவள் அணைப்பு அவனுக்குப் பிணைப்பு ஆகியது; காமம் தணிப்பு பெற்றது.

வாவியும் ஆறும் குடைந்தாடிச் சோலைகளில் தங்கி இன்புற்றுப் பயணம் முடித்தான். நிடத நாட்டின் கங்கைக் கரையை அவர்கள் அடைந்தனர்.

நகர்புறச் சோலை ஒன்றில் நளன் தேரில் இருந்து இறங்கி அங்குத் தங்கினான். அங்கிருந்து எழில் மிக்க நகரின் மதில்களையும், விண்ணுயர்ந்த மாடங்களையும் மதிலிற் பறந்த கொடிகளையும் காட்டினான்.

“அதோ தெரிகிறதே அதுதான் நம் நகர்” என்று உணர்வு படக் கூறினான்.

தான் செல்லும் நகர் நோக்கி அவள் எல்லையற்ற மகிழ்வு கொண்டாள். மிகப் பெரிய நகர்; அவன் மாமன்னன் அவள் பட்டத்து அரசி தமயந்தி.

அவள் உள்ளம் மகிழ்வு பெற்றது. கணவன் வீட்டை அடையும் புதுமணப் பெண் அடையும் மகிழ்ச்சி, மன எழுச்சி அவள் பால் தோன்றின. அங்குச் செல்வதை அவள் எதிர்நோக்கி இருந்தாள்.