பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புகழேந்தி நளன் கதை
அறிமுகம்

நளன் கதையை யார் கூறியது? ஏன் கூறப்பட்டது? ஒரு கதையாகிறது. பாரதம் அந்தக் கதையே தருமன் சூதாட்டத்தை மையமாகக் கொண்டு அமைந்த ஒன்று.

தருமன் நேர்மை தவறாதவன்; தவறு செய்யாதவன்; அத்தகையவன் சூது ஆடினான்; அதனால் விளைந்த விளைவு நாட்டை இழந்தான்; காட்டை அடைந்தான்; இழந்த நாட்டை மீண்டும் பெற்றான். இதுதான் பாரதக் கதை.

காட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தான்; விராட நகரில் ஒர் ஆண்டு மறைந்து உறைந்தான்; பின்பு வெளிப்பட்டான்.

பன்னிரண்டு ஆண்டுகள் காட்டிலும், ஒர் ஆண்டு மறைந்தும் வாழ்ந்து பின் நாடு கேட்டனர்; தருகிறோம் என்று கூறிய துரியன் வார்த்தை தவறிவிட்டான்.

அடுத்து என்ன செய்வது என்று செவிமடுத்துப் பலர் உரையையும் தருமன் கேட்டான். போர் தொடுப்பதே நேர்வழி என்று தம்பியர் உரைத்தனர். கண்ணன் உடனிருந்து அவர்கள் கருத்துரைகளைக் கேட்டான்; பாஞ்சாலியும் தான் விரித்த கூந்தலை முடிக்க வேண்டும் என்று துடி துடித்தாள்; போர் செய்வதே தக்க வழி என்று எடுத்து உரைத்தாள். வீமன் வீரம் பேசினான்; அர்ச்சுனன் காண்டீபம் எடுத்தான்; தருமன் அவர்களை அமைதிப் படுத்தினான்.