பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101முருகு சுந்தரம்



ஸ்பெயினில் உள்நாட்டுப்போர் நடந்துகொண்டிருந்த நேரத்தில், அரசியல் காரணங்களுக்காக இவன் கொல்லப்பட்டான் என்று கூறுவர். பாரதியைப் போல், பாரதிதாசனைப் போல், ஜெர்மானியக் கவிஞன் பிரெட் (Bertolt Brecht) டைப்போல் இவன் தீவிர அரசியல்வாதி அல்லன். எந்தக் கட்சி முத்திரையும் இவன் மீது விழவில்லை. எந்தக் கொடிக் கம்பத்தின் கீழும் இவன் கொள்கை முழக்கம் செய்தது கிடையாது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஸ்பெயின் தீபகர்ப்பத்தில் வேர்விட்டுச் செழித்த கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாக விளங்கிய மாகவிஞன் இவன்

லார்காவின் பரிதாபச்சாவு உலக மக்களின் உள்ளத்தில் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியதோடு, லார்காவுக்கும் அளவு கடந்த விளம்பரத்தையும் புகழையும் ஈட்டிக் கொடுத்தது. அமெரிக்க நாடுகளிலும், இங்கிலாந்திலும் இவன் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு, எல்லா மக்களாலும் விரும்பிப் படிக்கப்பட்டன.

“என் தந்தை ஒரு பணக்கார நிலக்கிழார்; குதிரைச் சவாரியில் வல்லவர். என் தாய் ஓர் ஆசிரியை ; குறிப்பிடத்தக்க ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தவர். என் இளமை வாழ்க்கை செழிப்பான எங்கள் தோட்டத்திலேயே கழிந்தது” என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறான் லார்கா.

லார்கா சிறந்த கவிஞன், சிறந்த ஓவியன்; நாடகத் துறையில் பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவன்; ஸ்பெயின் நாட்டு மரபிசையிலும், நாட்டுப்புற இசையிலும் வல்லவன்.

இளைமையில் நோய் வாய்ப்பட்டதால், ஆங்கிலக் கவிஞன் பைரனைப் போல இவனுக்கும் காலில் சிறிது ஊனம் உண்டு. ஆனால், அந்தக் கால் ஊனமே இவன் அறிவு வளர்ச்சிக்கும். கலை வளர்ச்சிக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தது. இளமையில் மற்ற குழந்தைகளோடு ஒடியாடி விளையாட முடியாத லார்கா, உட்கார்ந்த இடத்திலே அமைதியாகச் சிந்தித்துத் தன் சிந்தனை ஆற்றலைக் கூர்மைப்படுத்திக் கொண்டான்; சுற்றுப்புறத்தை நுட்பமாகக் கவனித்தான். வீட்டையே நாடக மேடையாக்கித் தன் உடன் பிறந்தவர்களையும், வேலைக்காரர்களையும் நடிக்கவைத்தான். தன் முதல் சேமிப்பிலிருந்து பொம்மை நாடக அரங்கம் (Toy Theatre) ஒன்று கிரானடா நகரில் இருந்து வாங்கி வந்தான் பொம்மலாட்டத்திலும் அவனுக்கு ஈடுபாடு இருந்தது.

ஷெல்லியைப் போல லார்காவும் பல்கலைக் கழகப் பட்டம் ஏதும் பெறவில்லை; பெற வேண்டும் என்ற நாட்டமும் இல்லை. பள்ளிப் படிப்பு அவன் சொந்த ஊரான ஃப்யூண்டிவ கொரசிலும், கிரானடா நகரிலும் ஒழுங்காக முற்றுப்பெற்றது. பட்டப்படிப்புக்காக கிரானடா பல்கலைக் கழகத்திலும்