பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்102

மாட்ரிட் பல்கலைக்கழகத்திலும் சேர்ந்தான். ஆனால் அவன் கவனம் கல்லூரிப் பாடத்திட்டத்துக்கு வெளியே இருந்தது. கிரானடா நகரப் புல்வெளிகளில் கற்பனையில் மிதந்தபடி காலார நடப்பதும், நாட்டுப்புற நாகரிகத்தில் தோய்ந்து தன்னை மறந்து திரிவதும், பழமையான ஆண்டலூசிய[1] நாகரிகத்தின் அடிப்படை மரபுகளையும், பண்பாடுகளையும் நேரில் பார்த்துப் பரவசப்படுவதும், நாடோடி (Gipsies) மக்களோடு நெருங்கிப் பழகி, போதையூட்டும் அவர்கள் சுவைப்பாட்டைக் கேட்டுச் சொக்கி நிற்பதும் அவன் அன்றாடப் பொழுது போக்குகள்.

ஸ்பெயின் நாட்டுக் கலை, இலக்கியக் கேந்திரமாக விளங்கிய ‘ரெஸிடென்சியா’வில் தங்கிப் பயிலும் வாய்ப்பு லார்காவுக்கு ஏற்பட்டது. கல்வியில் அக்கறை காட்டாவிட்டாலும், ஸ்பெயின் நாட்டுப் புகழ்பெற்ற இலக்கிய மேதைகளான உனாமுனோ, கஸ்ஸட் ஆகியோரின் பழக்கமும், சிறந்த சர்ரியலிசக் கவிஞரான சால்வடார் டாலியின் நெருங்கிய நட்பும் இவனுக்குக் கிடைத்தது. உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களான பெர்க்ஸன், வேலரி, கிளாடல், அரகான், செஸ்டர்டன், கீன்ஸ், எச். சி. வெல்ஸ் ஆகியோர் ரெஸிடென்சியாவுக்கு வந்து சொற்பொழிவாற்றினர். மேலே குறிப்பிடப்பட்ட மேதைகளின் தொடர்பால் இவன் கவிதையாற்றல் கூர்மை பெற்றது. ரெஸிடென்சியாவில் தங்கிருந்தபோது லார்கா கடுமையாக உழைத்தான்; நிறைய நாடகங்கள் எழுதி மேடையேற்றினான்; கவிதைகளாக எழுதிக் குவித்தான். அவற்றைத் திருத்தித் திருத்தி மேலும் மேலும் அழகுபடுத்தினான்; ஓவியங்கள் வரைந்தான்; பாடல்கள் எழுதிப் பியானோவில் இசையமைத்தான். நாட்டுப் பாடல்களைத் திரட்டினான். தனது படைப்புக்களை மேடையில் படித்துக் காண்பித்தான். ரெஸிடென்சியாவில் மாணவனாக இருந்த காலத்திலேயே ஸ்பானிய இலக்கியவாதிகளால் லார்கா கவிஞன் என்று அங்கீகரிக்கப்பட்டான்.

லார்கா இளமையில் ஓயாமல் படிக்கும் பழக்கமுடையவன். ஸ்பெயின் நாட்டு இலக்கியங்களோடு கிரேக்க நாடகங்களின் மொழிபெயர்ப்புகளையும், ஷேக்ஸ்பியர், இப்ஸன், விக்தர் ஹயூகோ, மேடர்லிங்க் ஆகியோரின் நூல்களையும் விரும்பிப் படித்தான். ஸ்பெயின் நாட்டுக் கவிஞர்களும், ஓவியர்களும், சிற்பிகளும், இசைவாணர்களும் இவனை எப்போதும் சூழ்ந்திருந்தனர்.

மாட்ரிட் நகரில் ரெஸிடென்சியாவின் மாணவனாக இருந்தபோது, இவனுக்கு மிகவும் நெருங்கிய நண்பராக வாய்த்தவர் மேனுவல்டிஃபல்லா என்பவர். அவருடைய நட்பு லார்காவின் இலக்கியப் பாதையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

  1. ஆண்டலூசியா ஸ்பெயினின் ஒருபகுதி, பழமையான, தனித்த நாகரிகச் சிறப்பையுடையது.