பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போல் பாப்லோ நெருடாவை அரசியல், ஏழ்மை, நீதி, சமத்துவம் ஆகிய கோட்பாடுகளினின்றும் பிரித்துப் பார்க்க முடியாது, அதனால்தான் நெருடாவை நைந்துபோன உலக அபலைகளின் ஒட்டு மொத்தமான ஆத்திரக் குரலாகவும், ஒதுக்கப்பட்ட தென்னமெரிக்க ஏழை நாடுகளின் புரட்சிச் சங்கநாதமாகவும் கேட்க முடிகிறது. பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த கவிஞர்களுள் முதன் முதலாக நோபெல் பரிசு பெற்றவன் நெருடா.

இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலக் கவிஞர்களுள், எலியட்டுக்கு அடுத்தாற்போலக் குறிப்பிடத்தக்கவர்கள், டபிள்யூ. எச். ஆடனும், டைலான்தாமசும் ஆவர். ஆடன் தீவிர மார்க்சியவாதியாக இருந்து, இருப்பியல் தத்துவத்தில் நுழைந்து இறுதியில் ஆன்மீகவாதியாக மாறியவர். நடப்பு உலகிலிருந்து விலகியிருந்த மந்திரத் தன்னியக்கத்தையும் (magical automatism) குறியீட்டாளர்களின் மொழிப் புரட்சியையும், (linguístic revolution) உங்கியலோடு இணைக்கும் கவிதை முயற்சியில் டைலான் தாமஸ் ஈடுபட்டனர்.

கவிஞன் எடுத்தியம்பியாகவும் ஆறுதல் கூறுவோனாகவும், தீர்க்கதரிசியாகவும் இருப்பதைவிடத் தன் சொந்த அனுபவங்களையே கவிதையாக வெளிப்படுத்த வேண்டும்; அதற்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக்கு அவன் திரும்ப வேண்டும். இம்முயற்சியின் மூலம் மனிதனுக்குள் குடியிருக்கும் மிருகத்தையும் தெய்வத்தையும் அறிந்து கொள்ளுவதோடு, வரலாற்றுக்கு முற்பட்ட அடிமனத்தின் தொடர்ச்சியையும் அறிந்து கலையைப் புதுப்பிக்க முடியும்”

என்று தாமஸ் குறிப்பிடுகிறார். இது மீண்டும் இயற்கைக்குத் திரும்புதல் (return back to nature) என்னும் குசோவின் கொள்கையைச் சார்ந்தது.

இருபதாம் நூற்றாண்டின் இயந்திரநாகரிகத்தால் சோர்வுற்ற ராபர்ட் க்ரேவ்ஸ் என்ற கவிஞர் வெண் தேவதை (White Goddess) என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் கீழ்க்கண்டவாறு உள்ளம் நைந்து எழுதுகிறார்:

"கவிதையின் செயல்பாடு என்பது கலைத் தேவதையின் கருணைவேட்டல், நம் வேண்டுதலுக்கேற்பக் கலைத் தேவதை வெளிப்படுத்தும் உணர்ச்சி வேறுபாடுகள் நம்மைப் பரவசப்படுத்தியும், நடுங்கச் செய்தும் அனுபவங்களாக மாறுகின்றன. இன்றும் கவிதையின் செயல்பாடும் பயனும் அப்படியே உள்ளன என்றாலும், அணுகு முறை மாறியிருக்கிறது. பண்டைநாளில் இயற்கையின் எச்சரிக்கையை உணர்ந்து மனிதன், தான் வாழும் உயிரினத்தோடு இசைந்தும், குடும்பத்தில் பெண்ணின் விருப்பங்களை மதித்துக் கட்டுப்பட்டும் வாழ்ந்தான். இப்போது அந்த இயற்கையின் எச்சரிக்கையை மதிக்காமல் தத்துவம், அறிவியல், தொழில் ஆகிய தாறுமாறான ஆய்வு