பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

121முருகுசுந்தரம்



மௌனிப்பதால்
நாமும்
மரங்களைப் பற்றிப்
பேசுவது குற்றமாம்.

ப்ரெக்ட் மக்கள் கவி. வருந்தும் மக்களுக்கிடையில் தாமும் ஒருவராக இருந்து, அவர்களுடைய துன்பங்களை ஏற்று அனுபவித்து, அவர்களுக்காகவே எழுதவேண்டும் என்பதில் ப்ரெக்டுக்கு விருப்பம் அதிகம். அந்த ஏழை மக்களுள் ஒருவனாகத் தம்மைக் காட்டிக் கொள்வதிலும் அவர் தயங்கியதில்லை

நான் பெர்டோல்ட் ப்ரெக்ட்;
ஏழைகளின் நண்பன்.
ஏழைகள் அணியும்
டெர்பி குல்லாய்தான்
நானும் அணிகிறேன்.
நான் சொல்லுகிறேன்:
ஏழைகள் நாற்றம் பிடித்தவர்கள்
ஏன்! நானுந்தான்.

ப்ரெக்டின் படைப்பைப் பற்றி எல்லாரும் பொதுவான ஒரு குற்றச் சாட்டைக் கூறுவதுண்டு; அதாவது அவர் கவிதையில் பிரச்சார நெடி அதிகம் என்று. அது உண்மைதான். தமக்குச் சரி என்று பட்ட கருத்துக்களையும், கொள்கைகளையும் ஓய்வு ஒழிச்சல் இன்றி நாடகங்கள் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும் அவர் புற்றீசல் போல வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் கூறிய கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொண்டு, அவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்றும் விரும்பினார். நாஜிகளுக்கு அஞ்சி ப்ரெக்ட் ஜெர்மனியை விட்டு வெளியேறும் போது அவர் எழுதிய கவிதையொன்றில்

எனக்குக்-
கல்லறைக்கல்
தேவையில்லை
அப்படியொன்று-
எனக்குத் தேவையென்று
நீங்கள் விரும்பினால்
அதில்-
இப்படி எழுதவேண்டும்.

‘அவன் சில
கருத்துக்களை
எடுத்து வைத்தான்;
நாங்கள்
ஏற்றுக் கடைப்பிடித்தோம்.

என்று குறிப்பிட்டுள்ளார்.