பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129முருகுசுந்தரம்



ஆட்சி புரிந்தது. நெருடாவின் அறிக்கையைக் கண்டு வெகுண்டு, தூதர் பதவியைப் பறித்துக் கொண்டது.

லார்காவின் பிரிவு நெருடாவை மிகவும் பாதித்தது. தமது நினைவுகளில் லார்காவைப் பற்றிக் குறிப்பிடும் போது, “அழகும் மேதைமையும் சிறகு விரித்துப் பறக்கும் உள்ளமும் பளிங்கு நீர் வீழ்ச்சியும் அவன் படைப்பில் ஒன்றாகக் கலந்துவரும்; கவர்ச்சியூட்டும் காந்த இன்பத்தைத் தன்னைச் சூழ்ந்திருப்பவர் மீது பரப்பும் கவிதா மண்டலமாக அவன் விளங்கினான். நாடக மேடையாக இருந்தாலும் அழகின் அலை வீச்சுக்களைத் தன்னைச் சுற்றிப் படர விட்டான். லார்கர்வைப் போல் மந்திரக் கையோடு கூடிய வேறொரு கவிஞனை நான் என் வாழ்நாளில் சந்தித்ததில்லை, சிரிப்பை மனப்பூர்வமாக நேசித்து என்னுடன் பழகிய வேறொரு சோதரனையும் நான் கண்டதில்லை. அவன் சிரித்தான்; சிந்தித்தான்; பாடினான்; பியானோ வாசித்தான் ; இடையிடையே சுடர்விட்டு மின்னினான். இயற்கை தனது பூரணமான ஆற்றல்களை யெல்லாம் அவன் மீது அள்ளிச் சொரிந்திருந்தது. அவன் தங்கச்சிற்பி; கவிதைத் தேனி” என்றெல்லாம் பாராட்டிக் கூறுகிறார்.

லார்கா இறந்த ஒராண்டுக்குப்பிறகு நெருடா அவரைப்பற்றி ஒரு நினைவுச் சொற்பொழிவாற்றினார். அக்கூட்டத்தில் இருந்த ஒருவன் எழுந்து நின்று லார்காவைப்பற்றி நீங்கள் எழுதியுள்ள இரங்கற்பாடலில் “அவனுக்காக மக்கள் மருத்துவமனைக்கு நீலவண்ணம் பூசினர்” என்று எழுதியிருக்கிறீரே! அதன் பொருள் என்ன?’ என்று கேட்டான்.

உடனே நெருடா, “நண்பரே! ஒரு பெண்ணிடம் வயதைக் கேட்பதும், ஒரு கவிஞனிடம் இது போன்ற கேள்விகள் கேட்பதும் ஒன்றுதான். கவிதையென்பது ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கும் பொருளன்று; அது சுழித்து ஓடிக்கொண்டிருக்கும் நீரோட்டம்; அது சிலசமயம் படைப்பாளிகளின் கையிலிருந்தும் நழுவிச் செல்வதுண்டு. கவிஞன் கையாளும் மூலப்பொருள் உண்மைப் பொருளாகவும் இருக்கலாம்; இன்மைப் பொருளாகவும் இருக்கலாம். எப்படியிருப்பினும் உங்களுக்கு ஒரு நியாயமான பதிலைச் சொல்ல நான் முயற்சி செய்கிறேன். சுதந்தரத்தையும் பேரின்பத்தையும் நோக்கி விரிந்து செல்லும் வானவெளியை இக்குறிப்பு சுட்டுகிறது. லார்கா எந்த இடத்தில் தோன்றினாலும் அவனைச்சுற்றியொரு மந்திரக்கவர்ச்சியும், மகிழ்ச்சிச் சூழ்நிலையும் பரவுவது வழக்கம். எப்போதும் சோகமான சூழ்நிலையில் அமைந்திருக்கும் மருத்துவ மனைகள் கூட, மகிழ்ச்சியூட்டும் அவன் கவிதையின் மந்திரக் கவர்ச்சியால் மாறிப் பளிச்சென்று நீல வண்ணம் பெறுகின்றன என்று வேண்டுமானால் நீங்கள்

பொருள் செய்து கொள்ளலாம்” என்று பதில் கூறினார்