பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்132

மழையோடும்
கலந்து வழங்கினாய்!

என்று உரிமையுணர்ச்சியோடு பாடுகிறார்.

இயற்கையும் வரலாறும் ஒரு நாட்டு மக்களுக்கு எப்படி அருள் வாக்காகவும், எதிர்கால வாழ்க்கைக்குத் திறவு கோலாகவும் விளங்குகின்றன என்பதையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி சுரண்டலாக மாறுகிறது என்பதையும், சொந்த உழைப்பாலும் நம்பிக்கையாலும் எப்படி வாழ்க்கையில் வெற்றிபெறலாம் என்பதையும் அக்காப்பியத்தில் விளக்குகிறார்.

ஆண்டிஸ் மலையில் பல நூறாண்டுகள் கவனிப்பாரற்று மறைந்து கிடந்த இன்கா கோட்டையை (Inca fortress) நேரில் கண்டு வியந்த நெருடா, மச்சுபிச்சுவின் உன்னதக் காலம் (The Heights of Machu Pichu) என்ற கவிதை நூலை எழுதினார். வியக்கத்தக்க அக்கோட்டைக் கற்களைப் பேச வைத்து, அதைக் கட்டிய இன்கா மக்களின் நாகரிகச்சிறப்பை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். இக்கவிதை நூலிலும், இன்கா கோட்டையைப் பார்த்து தொட்டுப் பேசி, ஒளிமயமான அதன் உண்மைகளை வெளிக் கொணரும் ஒரு பார்வையாளனாகவே விளங்குகிறார்: அதே சமயத்தில் அதை உருவாக்க உயிரைக் கொடுத்து உழைத்த பாட்டாளிகளை அவர் மறந்து விடவில்லை:

நான்-
பழமையைப் பார்க்கிறேன்.
போர்வைக்குள்
முடங்கித் துயிலும் அடிமைகள்
வயல்களில் உடல்கள்!
ஆயிரம் உடல்கள்!

உடலைக் கறுப்பாக்கும்
சுழற்காற்றில் சூழப்பட்டு
இரவில்-
மழையில் நனைந்த ஆடவர்!
ஆயிரம் பெண்கள்!

(மச்சுபிச்சுவின் உன்னதக் காலம்)

1954-இல் அவர் எழுதி வெளியிட்ட மூலக்கவிதைகள் (Elemental Odes) என்ற தொகுப்பு இதற்கு முன் வெளிவந்த பொதுக்காண்டங்கள் மச்சுபிச்சுவின் உன்னதக்காலம் என்ற கவிதை முறையினின்றும் மாறுபட்டது. அவற்றில் கையாண்ட இலக்கியப் பாணியையும், சொற்பொழிவுப் பாணியையும் கைவிட்டுவிட்டு, இவற்றில் எளிமைக்கு முதலிடம் கொடுத்தார். மிகச்சிறிய அடிகளில் எளிய சொற்களைப் பயன்படுத்தி