பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்18

களும் நெளிவு சுழிவுகளும், அற்புதங்களும் நம் கண்முன் பளிச்சிடும். நம் கண்ணுக்கு முதன் முதலில் எந்தப் பொருள் தென்படுகிறதோ, அதுவே நம் அறிவை நடத்திச் செல்லும் குறியீடாக அமையும். தெளிந்த நீர்நிலைகளும், நிலைக் கண்ணாடிகளும் கனவுலகத்தை நமக்குத் திறந்துவிடும்; சோகமயமான ஒரு பேரின்பத்தில் நம் உள்ளம் ஆழ்ந்து, எல்லையற்ற காட்சிகளில் திளைக்கும்."

இத்தகைய அனுபவத்தில் திளைத்து மிகவும் நூதனமான உணர்ச்சி வெளிப்பாடுகளுடன் கூடிய அரிய கவிதைகளைப் படைத்த கவிஞர் போதலேர் மட்டும் அல்லர்; வேறுபலரும் இருந்திருக்கின்றனர். மகாகவி பாரதியாருக்கும் கஞ்சாப் பழக்கம் உண்டு; குயில்பாட்டும் இந்த அடிப்படையில், அவர் விரும்பி ஏற்றுக் கொண்ட கனவு நிலைக் கற்பனை தான். கோலரிட்ஜின் 'குப்ளாய்கான்' என்ற கவிதையையும், இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்.

பியர் சார்ல் போதலேர் (Baudelaire Piere Charles) 1821 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற சட்டமன்ற உறுப்பினரின் மகனாகப் பாரிசில் பிறந்தார். இவர் சிறுவனாக இருக்கும் போதே தந்தை இறந்தார் தாய் ஓர் இராணுவ அதிகாரியை மறுமணம் செய்துகொண்டார். போதலேர் பள்ளிக் கல்வியை முடித்துக்கொண்டு சட்டக்கல்லூரியில் நுழைந்தார்.

வீட்டுக் கடங்காத பிள்ளையாக இருந்த இவரைக் கப்பலேற்றிக் கல்கத்தாவுக்கு அனுப்பினர் பெற்றோர். ஆனால் நடுவழியில் மொரீஷியஸ் தீவில் இறங்கிக் கொண்டார். வெப்பமண்டலத்தில் இருந்த மொரீஷியஸ் தீவில் சிலகாலம் தங்கியிருந்து வெதுவெதுப்பான அனுபவங்களோடு பாரீஸ் திரும்பினார் போதலேர்.

சுதந்தரமான பணவசதியோடு இருந்த போதலேர், பாரீசின் நவநாகரிகக் கேந்திரமான 'லத்தீன் குவார்ட்டர்ஸ்' என்ற பகுதியில் கட்டுப்பாடற்ற உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டார். 'சிறப்புக் கெட்டவர்' (decadent) என்ற பெயரை விரும்பி ஏற்றுக் கொண்டார். நீக்ரோக் கலப்பு இனக் காரிகை, கருப்பு ரதி ழான் துய்வால் (Black Venus Jeanne Duval) என்பவள் இவருக்கு நிரந்தரக் காதலியாகக் கிடைத்தாள். சீமாட்டி சபர்த்தியர் என்ற நடிகையிடமும் அவருக்குத் தொடர்பிருந்தது. போதலேரின் சொர்க்க நரகக் கற்பனைகள், இவ்விருவர் மீதும் அவர் கொண்ட காதற் சுழியிலே சுழன்றடிக்கின்றன.

இளமையில் அவர் விரும்பி ஏற்றுக் கொண்ட கொள்கை 'டாண்டியிசம்'. தன் விருப்பப்படி வாழ்தல், தன்முனைப்போடு முதன்மையாக இருத்தல், நட்பு, நாடு, குடும்பம்