பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19முருகு சுந்தரம்



என்ற பற்றுக்களை அறுத்துச் சுதந்தா மனிதனாக வாழ்தல், பிரபுக்களை வெறித்தல் என்பன டாண்டியிசத்தின் குறிக் கோள்கள்

“பசி, இன்பம், அன்புக்கினிய தாய் ஆகிய எல்லாவற்றுக்கும் மேலாக நான் நேசிப்பது இலக்கியமே” என்று குறிப்பிடும் போதலேர் 'கலை கலைக்காகவே' என்று கொள்கையுடையவர். ரொமாண்டிக் கவிஞர்கள் விரும்பிப் போற்றும், 'பொங்கவரும் மனவெழுச்சிக் கொள்கையை' இவர் ஏற்றுக் கொள்வதில்லை. கலைக்கு ஒரு தெய்வீக மரியாதையும் இவரிடத்தில் கிடையாது.

"அழகு, அறம், கலை யாவும் செயற்கையானவை; அவை கலைஞன் அல்லது கவிஞனின் திட்டமிட்ட சிந்தனையிலிருந்து தோன்றுபவை. கவிதையை எந்தவிதப் பிரசாரத்துக்கும் பயன்படுத்தக் கூடாது. அழகின் மீது அடங்காக்காதல் கொள்ளுதலும், உள்ளத்தின் ஆழத்திலிருந்து புறப்படும் அழைப்புகளுக்கு அடிபணிதலும் தவிர்க்க முடியாதவை என்ற காரணத்தால், கலைஞனும் கவிஞனும் தாம் மேற்கொண்ட படைப்புப் பணிக்கு நிரந்தர அடிமை" என்ற சிந்தனைப் போக்குடையவர் போதலேர்.

கவிதையின் கருப்பொருள் உயர்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தில் போதலேருக்கு உடன்பாடு கிடையாது. அன்றாட வாழ்க்கையில் தட்டுப்படும் சாதாரணப் பொருள்களும், இழிந்த பொருள்களுமே அழகானவை என்றும், அப்பொருள்களை அழகிய சொல்லோவியத்தால் அலங்கரிப்பதே மேலான கவிதை உத்தி (Grand Style of Poetry) என்று குறிப்பிட்டார். ஏழை, குடிகாரன், தெருப் பிச்சைக்காரன், விபசாரி, அபலை ஆகியோரும் பழி, பாவம் தீவினை, பொல்லாங்கு ஆகியவையும், அவர் கவிதைக்கு விரும்பி ஏற்றுக் கொண்ட கருப்பொருள்கள். இக்கொள்கைக்கு அவர் பாடியுள்ள 'சூரியன்' என்ற கவிதை சிறந்த எடுத்துக் காட்டு, மேற்கு வாயிலில் படியும் மாலைச் சூரியனின் வர்ண ஜாலத்தால் உலகின் சாதாரணப் பொருள்களும் எப்படிப் பேரழகு பூணுகின்றன என்பதை அப்பாட்டில் சிறப்பித்துப் பாடுகிறார். இத்தகைய ரசவாதத்தை ஏற்படுத்தக் கவிஞனானவன் மப்புமந்தாரமற்ற மேல் வானத்துக்குத் தன் ஒளிபடைத்த கண்களை உயர்த்த வேண்டும்; அப்போது பொருளற்ற அற்பப் பொருள்களும் நுட்பமான பொருள் விளக்கம் பெறும் என்று கூறுகிறார் போதலேர். போதலேரின் இக் கொள்கையை மாநகர்க் கொள்கை (The religious intoxication of great cities) என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

‘the spantaneous cverflcw of powerful feelings’