பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்22

செயற்கைச் சொர்க்கத்துப் பரவச நிலையைக்கூட மரணத் துன்பத்தைக் கலந்துதான் அனுபவித்தார். [1]'சிதிரியாப் பயணம்' என்ற கவிதையில், காதல் தீவே அவருக்குக் கறை படிந்து காட்சியளிக்கிறது.

வானம்—
தெளிந்த அழகோடு
காட்சியளிக்கிறது.
கடலும்—
ஆழ்ந்த அமைதியுடன்
படுத்திருக்கிறது.
ஆனால்—
எங்கும் இருள்:
திட்டுத் திட்டான
ரத்தக் கறைகள்
என் இதயம்—
ஒரு முரட்டுக் காகிதத்தில்
சுருட்டப் பட்டுப்
புதைந்து கிடப்பதாக
எனக்குள் ஓர் உருவகம்.

ஓ வினஸே!
உன் காதல் தீவில்
ஒரு கற்பனைத்
தூக்கு மரத்தில்
என உருவம்
தொங்கிக் கொண்டிருக்கிறது.
ஆண்டவனே!
என் உடம்பையும்
இதயத்தையும்
வெறுப்பில்லாமல் பார்க்க
எனக்கு ஆற்றலைக் கொடு!

என்று வேண்டுகிறார் போதலேர்.

அவர் எழுதியுள்ள கடற்புறவை (Albatross) என்ற பாடல் அவருடைய அவஸ்தையின் குறியீடாகவும், நச்சுப் பூக்களின் மையக் கருத்தாகவும் அமைந்துள்ளது. ஆல்பட்ராஸ் என்ற கடற்பறவை நீண்ட இறக்கைகளை உடையது, அதை வானமண்டலத்தரசன் (The prince of the clouds) என்று குறிப்பிடுவர். வானத்தை அனாயாசமாக அளக்க உதவும் அப்பெரிய சிறகுகளே. பூமியை அடைந்ததும் அதற்குப்பெரிய சுமையாக மாறிவிடுகின்றன. அவற்றைத் தூக்கிக்கொண்டு அப்பறவையால் அடியெடுத்து நடக்கமுடிவதில்லை.

போதலேர் தமது ஆற்றல் மிக்க கற்பனையின் உதவியோடு

  1. சிதிரியா-கிரேக்கக் காதல் தேவதை வீனஸ் வீற்றிருக்கும் தீவு.