பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்24

இவருக்கு உதவியாக இருந்த இவரது சிறகுகளே (கஞ்சா, அளவற்ற மதுப்பழக்கம்) கடைசி நாட்களில் இவரை முடக்கிப் போட்டு விட்டன. பக்கவாதம், இவரை முடக்கிப்போட்டுப் படுக்கையில் தள்ளிவிட்டது. 'சிபிலிஸ்' இவரைச் சிதைத்து விட்டது.

நீண்டநாள் கஞ்சாப் பழக்கத்தின் கடைசி மைல்கல், தலை சுற்றலும் (Vertigo) பைத்தியமும்தான். தன் கடைசி நிலையைப்பற்றிக் குறிப்பிடும்போது "இன்பமும் அதிர்ச்சியும் கொண்ட இழுப்பு நோய் (Hysteria) எனக்குப் பழக்கமாகிப் போய்விட்டது. தொடர்நது தலைசுற்றலால் நான் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். 23-1-1862 ஆம் நாளாகிய இன்று, எதிர்பாராத ஓர் எச்சரிக்கை எனக்குக் கிட்டியது. பறந்து செல்லும் பைத்தியச் சிறகு வீச்சின் காற்று, என்மீது படிந்து சென்றதை நான் உணர்ந்தேன்" என்று குறிப்பிடுகிறார்.

தன்பெயரைக்கூட நினைவுகூர முடியாத நிலையிலும், நிலைக் கண்ணாடியில் தன் சொந்த முகத்தையே அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையிலும், புறக்கணிப்புக்கு ஆளாகி, ஆதரவற்றுத் தமது கடைசி நாட்களைப் பாரிசில் கழித்தார். மிகச் சிறந்த கவிஞரான போதலேரைப் புகழ்பெற்ற பிரெஞ்சு இலக்கியக் கழகம் (French Academy) உறுப்பினராக ஏற்றுக் கொள்ள மறந்துவிட்டது. அந்த வேதனையைத் தாளாத அவர், பாரிசை விட்டு நீங்கி பெல்ஜியத்தில் சொற்பொழிவுப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அலைச்சல் அவர் உடலை மிகவும் பாதித்தது. 1867இல் பாரீஸ் மருத்துவமனையொன்றில் உயிர்துறந்தார்.

தாம் செய்யும் எந்தப் பணியையும், செப்பமாகவும், திருத்தமாகவும் செய்யவேண்டும் என்ற கொள்கையுடையவர் போதலேர். நிறைய எழுதுவதை அவர் விரும்பவில்லை. ஒன்று செய்தாலும், ஒப்பற்றதாக இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். நச்சுப்பூக்களை 1850-இல் தொடங்கினார். அதன் குறைகளைக் களைந்து, பத்தாண்டுகள் திருத்தம் செய்து, மேன்மேலும் அழகுபடுத்தினார். 1861-இல் அதன் இறுதி வடிவம் உருப்பெற்றது.

போதலேரின் படைப்புகள் பற்றி ஆர்தர் சைமன்ஸ் என்ற திறனாய்வாளர், தாம் எழுதியுள்ள "இலக்கியத்தில் குறியீட்டு இயக்கம்' (The Symbolist Movement in Literature) என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

"ஒரே ஒரு கவிதை நூலை எழுதுவதில் போதலேர் தமது வாழ்க்கை முழுவதையும் செலவிட்டார்; அதன் பிறகுதான் பிரெஞ்சு மொழியில் உயர்ந்த கவிதைகள் எல்லாம் தோற்றம் எடுத்தன.