பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்O30

இவனுக்கு வாழ்க்கைத் துறையிலும், இலக்கியத் துறையிலும் முன்னோடி என்று சொல்லலாம். வாழ்க்கையைக் கட்டுப்பாடின்றி விருப்பம்போல் சுவைத்துச் ‘சிறப்புக் கெட்டவர்’ என்ற பெயரைத் தாமே ஏற்றுக் கொண்ட பிரெஞ்சு அருணகிரி போதலேர். ரெம்போ அவரை அப்படியே பின்பற்றினார். தாயின் இரக்கமற்ற அடக்குமுறையும், கட்டுப்பாடற்ற இளமையும், பிடிவாதமும் போக்கிரித்தனமும் பாலுறவு வக்கிரமும் ரெம்போவின் படைப்புக்களில் பிரதிபலிக்கக் காணலாம்.

போதலேரின் மாநகரக் கொள்கையையும் ரெம்போ அப்படியே ஏற்றுக் கொண்டான். தனது நண்பர் வெர்லேனுடன் இலண்டன், பிரஸ்ஸல்ஸ், பாரிசு நகர வீதிகளில் சுற்றித்திரிந்தான். சாக்கடை யோரத்திலும், மதுப்புரைகளிலும் விபச்சார விடுதிகளிலும் இரவைக் கழித்தான். மாநகரங்களின் இருட்டு வாழ்க்கை அவனுக்குப் பழகிப்போன ஒன்று. நீலவானிலும், குளிர் சோலையிலும், அருவியிலும், சிலிர்க்கும் தென்றலிலும், சிரிக்கும் பூக்களிலும் பொதுவாகக் கவிஞர்கள் உள்ளத்தைப் பறிகொடுத்துக் கவிதைகள் எழுதுவது வழக்கம். ஆனால் மனித வாழ்வின் உயிர்த்துடிப்பை நகர வாழ்க்கையின் அவலங்களின் நடுவில் ரெம்போ கண்டான். நகரின் அழுகல் அவனுக்குக் கவிதை நாகரிகமாகிவிட்டது. நகரங்களின் இயற்கைக்கு மாறான நடைமுறை, அமைதியின்மை, சுறுசுறுப்பான இரவு வாழ்க்கை, சேரிகளின் இழிந்த நிலை, தொழிற் சாலைகளின் ஓசை, புகை படிந்த சுற்றுச் சூழல் யாவும் அவன் கவிதையின் கருப்பொருள்களாக இடம் பெற்றன.

பிள்ளைப் பருவத்திலும் விடலைப் பருவத்திலும் தாயின் அடக்கு முறைக்கு ஆட்பட்டு வருந்திய போது அவனையும் அறியாமல் அவன் அடிமனத்தில் பெண்களின் மீது ஒரு வெறுப்புணர்ச்சி படிந்திருந்தது. முதன் முதலில் வீட்டை விட்டு ஓடியபோது பெண்மையைப் பற்றி ஒரு வியப்பார்வமும், இனம்புரியாத குறுகுறுப்பும் அவனுள்ளத்தில் குடி கொண்டிருந்தன. பெண்கள் கூட்டத்தில் நுழையும் போது புறச்சமய உலகத்தில் தேவதைகளுக்கு ஒப்பாக நுழையும் வீரனாகத் தன்னைக் கற்பனை செய்து கொண்டான். ஆனால் அப்போது அவன் ஆர்வத்தோடு சந்தித்த பெண்கள் முரண்டு பிடிப்பவர்களாகவே அவனுக்கு வாய்த்தனர். அவர்கள் சந்திப்பால் ஏற்பட்ட அனுபவங்களைச் சூரியனும் தசையும் (Sun and Flesh) கேலி (The Tease) பச்சை நடனச் சாலையில் (At the Green Cabaret) அலைச்சல் (Wandering) நினா என்ன பதிலிறுத்தாள் (What Nina Answered) ஆகிய கவிதைகளில் பதிவு செய்கிறான்.

இரண்டாவது முறை வீட்டை விட்டுப் பாரிசுக்கு ஓடியபோது பிரெஞ்சுப் புரட்சி முடிந்து கம்யூன்களின் ஆட்சி அங்கே நடை