பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35முருகு சுந்தரம்

இத்தொகுப்பில் உள்ள எல்லாக் கவிதைகளுமே சிறந்தவை என்று சொல்ல முடியாது. ஆனால் கடைசி மூன்று வெளிச்சங்களும் மிகவும் ஒளிமிக்கவை. அவற்றுள் மேதை (Genie) என்ற தலைப்பில் கூறப்பட்ட கருத்துக்கள், ரெம்போவின் படைப்புக்களில் ஆதிக்கம் செலுத்தும் காதல் உணர்வின் திறவுகோலாக விளங்குகின்றன.

“என்னால் காதலைச் சாளரத்துக்கு வெளியே தூக்கி எறிய முடியாது” என்றும் “நான் காதலிசையின் மூலக் குறிப்பைக் கண்டறிந்த கலைஞன்” என்றும் ரெம்போ பெருமிதமாக வெளிச்சங்களில் ஓரிடத்தில் குறிப்பிடுகிறான்.

ரெம்போ தான் கண்டறிந்ததாகக் குறிப்பிடும் ‘காதலிசையின் மூலக்குறிப்பு’[1] எதுவாக இருக்க முடியும் என்று திறனாய்வாளர்கள் மூளையைக் குழப்பிக் கொண்டனர். வாழ்க்கை முழுவதும் நாத்திகனாக வாழ்ந்த ரெம்போ, தன் செய்த குற்றங்களிலிருந்து மீட்சிபெற ஒரு வழிகாட்டியைத் தேடினான். அந்த வழிகாட்டியைத் தேவன் என்றோ, தேவமகன் என்றோ, மெசைய்யா என்றோ, நபி என்றோ குறிப்பிடவில்லை. அன்பின் வடிவமாக அவனைக் குறிப்பிடுகிறான்:

"அவன் நம்மை அறிவான்; அவன் நம் எல்லாரையும் விரும்புகிறான். இந்தக் குளிர்கால இரவில், நிலத்தின் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிவரை, பூமியின் கொந்தளிக்கும் முனைகளிலிருந்து கோட்டை கொத்தளம் வரை, நெரிசலான குடியிருப்பிலிருந்து அமைதியான கடற்கரை வரை, பார்வைக்கு எட்டிய தூரம் வரை, வலிமைக்கும் வாட்டத்திற்குமிடையில் கூடியிருந்து அவனைத் தரிசிக்கவும், அவனை மீண்டும் வழியனுப்பவும் வேண்டும். அலைகளின் நடுவிலும், பரந்த பனிப்பாலையின் உச்சியிலும் அவன் உடலையும், உயிர் மூச்சையும், அவன் ஞானப் பேரொளியையும் பின் பற்றிச் செல்ல வேண்டும்!"</poem>

பெரும்பாலான கவிஞர்கள் கற்பனையுலகில் சஞ்சரித்துப் பழக்கப்பட்டவர்கள். நடைமுறை உலகின் வெளிப்படையான உண்மைகள் மிகவும் கசப்பானவை. அவற்றைக் கவிஞர்கள் ஏற்றுக் கொள்ளத்தயங்குவதோடு, அவற்றிலிருந்து தப்பியோடவும் விரும்புகின்றனர். நடைமுறை உலகிலிருந்து தப்பிச் செல்ல, முதலில் தம்மை மறக்க வேண்டும். தம்மை மறக்கக் கவிஞர்கள் மது, அபின், கஞ்சா போன்ற பழக்கங்களில் ஈடுபடுகின்றனர். அப்பழக்கங்கள் உளக்கட்டுப்பாட்டைத்தளர்த்தி, அதை அதன் விருப்பப்படி செலுத்துகின்றன. உள்ளம் விரும்பும் கற்பனை உலகமொன்றைத் தாமே படைத்துக் கொண்டு, இவ்வுலகத் துன்பங்களை

  1. the key-signature of love