பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்O36

மறந்து தம் விருப்பம் போல் கவிஞர்கள் அதில் வாழ்கின்றனர். இதை ‘மருள்மயக்க நிலை’ என்பர். போதலேரைப் போலவே ரெம்போவும் ஒரு கற்பனைச் சொர்க்கத்தைப் படைத்துக் கொண்டு, அதில் பயணம் செய்கிறான்.

ரெம்போவின் படைப்புக்களில் குடிபோதைப் படகு[1] (The Drunken Boat) என்ற கவிதை மிகவும் விளம்பரம் பெற்ற்து. இது ஒரு குறியீட்டுக் கவிதை. இளமையில் தாயின் கண்டிப்பாலும் அடக்கு முறையாலும் ஏற்பட்ட குமுறல்களும், வெர்லேன் உறவால் ஏற்பட்ட மனவிகாரங்களும், நகரத்தின் இருண்ட வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கங்களும், வன்முறையும் ஆரவாரமும் மிக்க பெருங்கடலாக இக்கவிதையில் உருவகப்படுத்தப்படுகினறன. அக்கடலில் மிதக்கும் ஒரு துடுப்பில்லாத படகு ரெம்போவுக்குக் குறியீடாக வருகிறது. கடலில் தக்கைபோல் தள்ளாடி வரும் இப்படகு பெரும்புயலோடும், குன்றைப்போல் கொந்தளிக்கும் அலையோடும் பனிப்பாறையோடும், திமிங்கிலம் கடற்பாம்பு போன்ற கொடிய கடல் உயிரிகளோடும் போராடி முன்னேறுகிறது. இனமையில் கிடைக்காத சுதந்திரம் இந்தக்கற்பனைப் பயணத்தில் ரெம்போவுக்குக் கிடைக்கிறது. வீட்டைவிட்டு மூன்று முறை ஓடியபோது, அவனுக்கு ஏற்பட்ட மனக்கோளாறான மகிழ்ச்சியையும் இப்பயணம் படிப்பவர்க்கு உணர்த்துகிறது. ‘குடிபோதைப்படகு’ எழுதப்பட்டபோது ரெம்போ கடலையே பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போதலேர் குறியீட்டியத்தின் (Symbolism) முன்னோடி, வெர்லேன் அத்துறையில் சாதனைகள் நிகழ்த்தியவர். கிரம்போ அவரையும் தாண்டிச் சென்றவன்.

செம்போ முதலில் கவிதையை மரபில் எழுதினான்; இடையில் கட்டிலாக் கவிதைக்கு வந்தான்; பின்னர் வசனத்தையே கவிதையாக்கினான். ‘பிரெஞ்சுக் கவிதையனைத்தும் எதுகை மோனையமைந்த உரைநடை’ என்று ஓரிடத்தில் குறிப்பிட்டான்.

சமயம், சமுதாயம், அரசியல் ஆகியவற்றை அவன் எப்படி எதிர்த்துப் புரட்சிசெய்தானோ அதேபோல் கவிதை நடையையும் எதிர்த்துப் புரட்சி செய்தான். கவிதைச்சொற்களின் இயல்பான பொருளையே மாற்றி, சொற்களின் தன்னியக்கம், சொல்மயக்கம், சொல்விளையாட்டு, ஓசை வேறுபாடு இவற்றின்மூலம் மொழியின் தொடக்கநிலைப்பண்புகளைக்கிளப்பிப் படிப்பவர் உள்ளத்தில் பல்வேறு உணர்ச்சி வேறுபாடுகளைத் தோற்றுவிக்க முயன்றான். தான் வெளிப்படுத்தும் ஒவ்வோர் உணர்ச்சிக்கும் ஒரு புதிய கவிதை மொழியை உருவாக்க முடியும் என்று கனவு கண்டான். அதற்காக முயற்சியும் செய்தான். ‘கடற் பக்கம்’ என்ற கவிதையில் தன் சொல்லாற்ற

  1. பிரஞ்சுப் பெயர் Bateau lvre.