பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 இசை-
சிற்பங்களின் மூச்சு;
ஓவியங்களின் பேச்சு.





ரெய்னர் மேரியா ரில்க்
(1875–1926)


பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பால்கன் நாடுகளில் பிறந்த ஒருவன் தன்னை எந்த நாட்டுக்காரன் என்று சொல்லிக் கொள்ள முடியாதபடி, அங்கே படையெடுப்புக்களும், விரைந்த ஆட்சி மாற்றங்களும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. கவிஞர் ரெய்னர் மேரியா ரில்க் பிராகுவில் பிறந்தவர்; பொகீமிய இனத்தைச் சார்ந்தவர்; ஆஸ்திரியக் குடிமகன்; ஜெர்மன்கவி.

தந்தை ஓய்வு பெற்ற ஆஸ்திரிய இராணுவ அதிகாரி; பெண் குழந்தை வேண்டும் என்று விருப்பத்தோடு காத்திருந்த தாய்க்கு, ரில்க் ஆணாகப் பிறந்தது பெருத்த ஏமாற்றம்: ஏனவே ரில்க்கை ஒரு பெண்ணைப் போல வளர்த்தாள் ‘ரெனி’ என்று பெயர் சூட்டி. பெண்ணுடையும் சுருள் முடியும் அணிவித்து, பொம்மைச் சமையலறையொன்று விளையாடக் கொடுத்து வளர்த்தாள். பொருள்களையும் இருக்கைகளையும் துடைத்து தூய்மையாக வைத்திருப்பது எப்படியென்றும், வீட்டு வேலைகளில் தாய்க்கு எப்படி உதவுவது என்றும் கற்றுக் கொடுத்தாள்.

அடிக்கடி நோய்வாய்ப்படும் அவரது இளமை இராணுவப் பள்ளியிலும், வணிகக் கல்லூரியிலும் கழிந்தது. பிராகு பல்கலைக்கழகத்திலும் இரண்டாண்டுகள் சட்டக் கல்வி பயின்றார். கொஞ்சநாள் வழக்குரைஞராக இருந்த தன் உறவினரிடம் பணிபுரிந்தார். கடைசியில் இலக்கியப் பணியே தனக்கு ஏற்ற பணியென்று முடிவு செய்தார்.