பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43முருகு சுந்தரம்

கொண்டான். மிகவும் ஓய்வாக அமர்ந்த நிலையில் கையிலிருந்த புத்தகத்தை மூடிவைத்து விட்டுச்சுற்றியிருந்த அமைதியான, அழகிய இயற்கைச் சூழ்நிலையில் தன்னை மறந்து மூழ்கினான். இதற்கு முன் அனுபவித்திராத ஓர் உணர்ச்சி வெள்ளம் அவனுள் அலையாகப் பரவுவதை உணர்ந்தான், அவன் அமர்ந்திருந்த மரத்தின் நடுவிலிருந்து அவ்வுணர்ச்சி மெல்லிய அதிர்வுகளாக அவனுள் இறங்கியது. இதுபோன்ற இன்ப அதிர்ச்சியை அவன் என்றும் அனுபவித்ததில்லை. அவன் உடம்பே ஆன்மாவாக மாறி, இயல்பான தன் செயல்களை மறந்து, ஏதோ ஒரு பேராற்றலைத் தன்னுள் ஏற்றுக் கொண்டது போலிருந்தது, அதுவுமன்றி எளிதில் புலப்படாத இயற்கையின் மறுபுறத்தைக் கண்டதுபோலவும் இருந்தது.”

ரில்க் டியூனோ கோட்டையில் இருந்தபோது தம்மை யாரோ அழைப்பதைப்போன்று உணர்ந்தார். ‘நான் கூவியழைத்தால், தேவதைகளின் கூட்டத்தில் கேட்பவர் யார்?’ என்று அக்குரல் அடிக்கடி கூறிக்கொண்டிருந்தது. அந்த அடியே டியூனோ இரங்கற்பாவின் துவக்கமாக அமைந்தது.

டியூனோ இரங்கற்பாக்களை ரில்க் 1912- ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கினார். ஆனால் அவற்றை 1923 வரை முடிக்கவில்லை. அதற்குப் பலகாரணங்களை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 1912-ஆம் ஆண்டில் அவருடைய கருத்துக்களையும், கவிதைப்பாணியையும் தீவிரமாகப் பாதிக்கும் அனுபவம் அவருக்கு ஏற்பட்டது. உவமைகள் மூலம் கருத்து விளக்கம் செய்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டு, கருத்தையும் கருத்து விளக்கத்தையும் ஒன்றாகப் புரிந்து கொள்ளும் உருவக உத்திக்கு மாறிக்கொண்டிருந்தரர்; இது முதற் காரணம். அவருள்ளத்தில் பதித்த உணர்வுகள் கருத்துருவம் பெற நீண்ட சிந்தனை தேவைப்பட்டது: இது இரண்டாவது காரணம். மேலும், இவ்விரங்கற்பாக்களை எழுதும் போது உணர்ச்சி பூர்வமான இலக்கியத் தூண்டுதல் தேவைப்பட்டது. அத்துண்டுதலைச் செயற்கையாகப் பெறமுடியாது; இது மூன்றாவது காரணம்.

இவ்விரங்கற்பாக்கள் ரில்க்கின் அபூர்வப் படைப்பாற்றலுக்குச் சான்றாக உள்ளன. இப்பாக்களும் படிப்போரை மயக்கவைக்கும் மறைபொருள்களை உள்ளடக்கியிருக்கின்றன. இதுவே இப்பாக்களின் வலிமையும், தொய்மையும் ஆகும். ஆங்கிலக் கவிதையுலகில், டபிள்யூ. பி. யேட்சும், டி. எஸ். எலியட்டும் வகிக்கும் இடத்தை ஜெர்மானியக் கவிதை உலகில் ரில்க் வகிக்கிறார். டி. எஸ். எலியட் எழுதியுள்ள 'பாழ்நிலத்திற்கு' ஒப்பாக ரில்க்கின் ‘டியூனோ இசங்கற்பாக்களை’, இலக்கியவாதிகள் மதிக்கின்றனர்.

டியூனோ இரங்கற்பாக்களின் வெற்றிக்கு ரில்க் பயன்படுத்தியிருக்கும் கட்டற்ற கவிதையாப்பே காரணம் என்று அறிஞர்