பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்52

தனித்தன்மைமிக்க இந்த ஜெர்மானியக் கவிஞனின் தாக்கம், ஆங்கிலோ-அமெரிக்கக் கவிஞர்களான டபிள்யூ எச். ஆடன், சிட்னிகீஸ், ஆலன் லூயிஸ், எடித்சிட்வெல், எட்வின் மூர் ஆகியவர்களைப் பெரிதும் பாதித்திருக்கிறது. ஜெர்மனியின் எல்லைக்கு வெளியிலே தமது கவிதையாதிக்கத்தை மிகுதியாகச் செலுத்தியவரும், கெதேவுக்கு அடுத்தநிலையில் வைத்துப் பேசத்தக்கவரும், ஜெர்மானியக் கவிஞர்களுள் ரில்க் கைத்தவிர வேறுயாருமில்லை.

ருசியக் கவிஞர்களான பாஸ்டர் நாக்கும் ஸ்வெட்டேவாவும் ரில்க்கின் ஆற்றலை வியந்து, அவரைத் தம் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு வழிபட்ட ‘அடியார்கள்’ என்று கூறலாம். மல்லார்மேயை விடக் குறைந்த தெளிவற்ற தன்மையும், வேலரியைவிட அதிக மனித நேயமும் ரில்க்கின் படைப்பில் காணப்படுவதாக ஆங்கிலக் கவிதை வாசகர்கள் குறிப்பிடுகின்றனர். பெருமிதமான படைப்பாற்றலைப் பொறுத்த வரை மகாகவி போதலேருக்கு ஒப்பாகச் சொல்லத்தக்க ஒரே ஐரோப்பியக் கவிஞன் ரில்க்தான் என்பதில் ஐயமில்லை.

ரில்க்கைப் பற்றி எதிர் மறையான கருத்தைச் சொன்னவன், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மார்க்சியக் கவிஞன்பெர்டோல்ட ப்ரெக்ட். ‘ரில்க்கின் கவிதைகள் சீரழிந்து போன நடுத்தர வர்க்கத்தின் பிதற்றல்கள்! எனக்கு அவற்றைப் பற்றிக் கவலையில்லை’ என்று சொன்னான்.

ரில்க் ஜெர்மனியின் தலை சிறந்த கவிஞர்களுள் ஒருவர் என்றாலும், அவரிடத்திலும் சில குறைகளைத் திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவருடைய-

(1) சிறந்த படைப்புகள் புரிந்து கொள்ள முடியாதவை.

(2)சில படைப்புகள் - மெத்தப் படித்தவர்கள் மட்டுமே நெருங்கத்தக்க ஆழ்ந்த இலக்கிய துணுக்கம் பொருந்தியவை.

(3)சில சமயங்களில் அவர் பயன்படுத்தும் பொருத்தமில்லாத படிமங்கள் கவிதைச் சுவையைக் கெடுத்து விடுகின்றன.

(4) அவருடைய சிறந்த கவிதைகளில் சில (ஆர்ஃபிஸ் யூரிடிஸ் ஹெர்மிஸ்) செறிவும் சுருக்கமுமின்றிப் பழங்காலப் பாடல்களைப்போல் இருக்கின்றன.

ரில்க்கின் சாவும் கற்பனைச் சுவை பொருந்தியது. செடியிலிருந்து ஒரு ரோஜா மலரைக் கிள்ளிய போது, முள்குத்தி அவர் இறந்து விட்டதாக ஒரு செய்தி வழங்குகிறது. ‘டெட்டனஸ்’ என்ற இசிவு நோயைப் பற்றி அறியப்படாத தேதி அந்தக் காலத்தில் இச்செய்தி வியப்பிற்குரிய ஒன்றாக இருந்திருக்கலாம். ஏற்கெனவே இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ரில்க்கின் உடல் நிலை, முள் குத்தியதும் மேலும் மோசமாகி, அதுவே இசிவு நோய்க்குக் காரணமாகி, அதுவே சாவுக்கும் காரண மாகியிருக்கலாம்.