பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்54

இதாஹோ மாநிலத்தில் ஹெய்லி என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தாயார் அமெரிக்க கவிஞர் ஹென்றி வோர்ட்ஸ் வொர்த் லாங்ஃபெல்லோவின் உறவினர். தந்தை அரசாங்க அலுவலர்; ஹெய்லியில் முதன் முதலாகக் காரைக் கட்டிடம் கட்டியவர்.

இளமையிலேயே ஓயாமல் படிக்கும் குணமுடையவர் பவுண்ட், நியூயார்க் ஹேமில்டன் கல்லூரியில் ஒப்பிலக்கியத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர் ஸ்பெயின் நாடகாசிரியர் லோப்-டி-வேகாவின் படைப்புக்களை ஆய்வு செய்வதற்காக ஓராண்டு ஸ்பெயின், பிரான்சு, இத்தாலி ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற் கொண்டார். மீண்டும் அமெரிக்கா திரும்பி இண்டியானாவில் ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியேற்றார். ஆனால் கல்லூரி மரபுகளுக்கு மாறாகவும், மனம் போன போக்கிலும் நடப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுப் பணியிலிருந்து விலக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்ட பவுண்ட், “நான் மேற்கொண்ட கட்டுப்பாடற்ற வாழ்கை (the Latin Quarter type life) கல்லூரி நிர்வாகத்துக்குப் பிடிக்கவில்லை” என்று குறிப்பிடுகிறார்.

பவுண்டுக்கு அமெரிக்காவையும் பிடிக்கவில்லை; அமெரிக்க மக்களையும் பிடிக்கவில்லை. அமெரிக்கா குடியேற்ற நாடு. அங்கு பலநாட்டு மக்களும் குடியேறி, நிலையான ஒரு பண்பாட்டு வளர்ச்சியை அடையாத நிலையில் இருந்தனர். அங்கிருப்பதை விடத் தொன்மைச் சிறப்பும், கலை இலக்கியப் பண்பாட்டுச் சிறப்பும் மிக்க ஐரோப்பிய நாடுகளில் சென்று வாழ்வது சிறந்தது என்று பவுண்ட் கருதினார். அமெரிக்காவை ‘அரைக் காட்டு மிராண்டி நாடு’ (half-savage country) என்று இகழ்ந்து கூறிவிட்டு இங்கிருந்து வெளியேறினார். அவ்வாறு வெளியேறிய வேறிரு கவிஞர்கள் ஹென்றி ஜேம்ஸாம், டி.எஸ். எலியட்டும் ஆவர்.

தம்மை ஓர் எழுச்சி மிக்க புரட்சிக் காரனாகக் கருதிய பவுண்ட் பழமையையும் பரம்பரை பரம்பரையாகப் பழமையில் மூழ்கிக் கிடந்த அமெரிக்க நடுத்தர மக்களின் மடமையையும் வெறுத்தார். ‘புல்லிதழ்களின்’ (Leaves of Grass) ஆசிரியராகிய கவிஞர் வால்ட் விட்மனைக் கூடப் பவுண்டுக்குப் பிடிக்காது. பவுண்டுக்கு அவர் ஒரு குமட்டும் மாத்திரை. விட்மனின் கவிதைகளில் தொழில் நுட்பம் இல்லை என்பது அவர் கருத்து.

“விட்மனே! நீ ஒரு முட்டாள் தந்தை. ஒரு வளர்ந்த குழந்தையாக நான் உன்னைச் சந்திக்க வருகிறேன். உன்னை நான் நீண்ட நாட்களாக வெறுத் திருந்தாலும், உன்னிடம் நட்புச் செய்து கொள்ளும் அளவுக்கு