பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

550முருகு சுந்தரம்

வயதானவன். எப்படியிருந்தாலும் புதிய கட்டையை வெட்டிக் கொடுத்தவன் நீதானே! அதைச் செதுக்கும் காலம் வந்து விட்டது. நமக்கு ஒரே மூலம்; ஒரே உயிர். நம் தொடர்பு நீடிக்கட்டும்”

என்று பவுண்ட் விட்மனிடம் சமாதானம் செய்து செய்துகொள்கிறார். இது உண்மைதான். விட்மனும் அமெரிக்கக் கவிதை, தாம் விட்ட இடத்திலேயே நிற்க வேண்டும் என்று சொல்லவில்லை; தாம் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து அது முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றே விரும்பினார்.

ஐரிஷ் கவிஞரான யேட்சைப் பவுண்ட் மிகவும் மதித்துப் போற்றினார். கடந்த ஒரு நூற்றாண்டில் யேட்சுக்கு இணையான கவிஞர்கள் யாருமில்லை என்ப்து அவர் கணிப்பு எனவே யேட்சைச் சந்தித்து அவரோடு பழக வேண்டும் என்ற ஆர்வத்தோடு பவுண்ட் இலண்டன் வந்து சேர்ந்தார். பவுண்டுடன் பழகிய யேட்ஸ் அவருடைய அறிவுநுட்பத்தை வியந்து பாராட்டினார். தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் இலண்டனில் உள்ள இளைய தலைமுறைக் கவிஞர்களுள் பவுண்ட் முதன்மையானவர்: தீவிர படைப்பாற்றல் மிக்கவர். இவர் பாலுணர்வற்ற ஓர் அமெரிக்கப் பேராசிரியர்; உணர்ச்சியை விட உழைப்புக்கு முதலிடம் கொடுப்பவர்; நினைத்தவுடன் பாடவல்ல சிறந்த ஆசு கவி; இவர் கவிதையில் உருவத்தை விட நடை நன்றாக இருக்கும்; அந்த நடையும் இடையிடையே உடைந்தும் தடைப்பட்டும் கொடுங்கனவாகவும், குழப்பம் மிக்க வலிப்பாகவும் முடிந்து விடும். அவருடைய சோதனை முயற்சிகள் தவறானவையாக இருக்கலாம். ஆனால் எழுச்சியில்லாத மரபைவிட, முன்னேற்றமான, தவறுகள் பரிசுக்குரியவை” என்று யேட்ஸ் குறிப்பிட் டுள்ளார்.

இலண்டனில் வாழ்ந்த காலத்தில், எழுத்தில் தீவிரப் புரட்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துடைய இளைஞர்களை ஒன்று சேர்த்துப் பவுண்ட் அவர்களுக்குத் தலைமை தாங்கினார். இங்கு வாழ்ந்த காலத்தில் இவர் மேற்கொண்ட பணிகளில் குறிப்பிடத் தக்கது. அமெரிக்க அறிஞர் எர்னெஸ்ட் ஃபென்னலோசா (Ernest Fennelosa) வின் கையெழுத்துப் படிகளை ஆய்ந்து சீன, ஜப்பானியக் கவிதைகளையும், நோ (Noh)[1] நாடகங்களையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பதிப்பித்ததுதான். ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் பண்புகளையும், சிறப்புக்களையும் மேலை நாடுகளில் விளம்பரப் படுத்திய பெருமையும் இவரையே சாரும்.

  1. ஜப்பானிய நாடகம் ஃபென்னலோசாவின் கையெழுத்துப் பிரதிகளில் இந்நாட்கங்கள் கிடைத்தன. பவுண்ட் இவற்றைச் செப்பனிட்டு வெளியிட்டார். ‘நோ’ நாடகங்களிலிருந்து பவுண்ட் கற்றுக் கொண்ட பல செய்திகள் ‘படிமம்’ பற்றிய அவருடைய கோட்பாடுகளை உருவாக்கின