பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57முருகு சுந்தரம்

எழுப்பப்படும் சந்தங்களை விட கருத்துத் தொனியின் அடிப்படையில் எழுப்பப்படும் சந்தங்களே சிறந்தவை. அவையே கவிஞனின் மனநிலையைத்தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

(3) கடினமாக இருந்தாலும் சரியாக எழுதப்படும் கவிதையில் தெளிவின்மையோ, கருத்துறுதியற்ற தன்மையோ இருக்காது.

மேலே குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் நல்ல கவிதையிலக்கியப் படைப்புக்களுக்கு இன்றியமையாதவை என்றாலும், இலண்டன் இலக்கிய வாதிகளிடையே இக்கருத்துக்களுக்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. போராட்டக் குணம் மிக்க அமி லோவல் (Amy Lowell) என்ற பெண்மணி இவருக்கு எதிராகக் கிளம்பி, இளங்கவிஞர்களைத் தம் பக்கம் ஈர்த்துக் கொண்டு படிம இயக்கத்துக்குத் தலைமை ஏற்றார். இதனால் வெறுப்பும் சலிப்பும் அடைந்த பவுண்ட் அவர்களை நெல்லிக் காய் மூட்டை என்று வெறுத்தொதுக்கிவிட்டு, இலண்டனை விட்டு வெளியேறிப் பாரிசு நகரம் வந்து சேர்ந்தார்.

எங்கு சென்றாலும் அவரைப் பின்பற்றும் ஓர் இளைஞர் கூட்டம் அவரைப் சுற்றிக் கொள்வதுண்டு. ஆனால் பவுண்டு அவர்களைச் சட்டை செய்வதில்லை. இவருடைய விமர்சனங்களும் மிகக் கடுமையானவையாக இருக்கும். எப்படியிருந்தாலும் இவர் ஒரு வியப்பிற்குரிய மனிதராக எல்லாராலும் கருதப்பட்டார். ஓவியரும் நாவலாசிரியருமான விண்ட்ஹாம் லூயிஸ் Wyndham Lews இருபது வயது இளைஞரான பவுண்டைப் பற்றிக் குறிப்பிடும் போது “சகித்துக் கொள்ள முடியாத விறைப்பும், அலட்டலும், துள்ளலும் மிக்க அமெரிக்கச் செந்தாடி இளைஞன், தண்ணீரில் மிதக்கும் எண்ணெய்த் துளியாக அவன் யாரிடமும் ஒட்டாமல் இருந்தான். அவன் விருப்பமெல்லாம் பிறர் உள்ளத்தில் தன்னைப் பற்றிய முத்திரை பதிக்க வேண்டுமென்பதே” என்றுகூறுகிறார்.

பவுண்டின் பிடிவாதமும் புலமைச் செருக்கும் மேலைநாட்டு இலக்கிய வட்டாரத்தில் மிகப் பிரசித்தம். இலக்கிய வாதிகள் அவரை நெருங்கவே அஞ்சுவர். மேடையில் பேசும் போது கரகரத்த குரலில் கலைப் புரட்சிக் கொள்கையை உரக்கப் பேசுவார். அவருடைய முரட்டுத் தாடியும், யாரையும் மதிக்காத தன்மையும், குத்தலுடன் கூடிய கிண்டல் பேச்சும் ஒரு சர்வாதிகாரப்புரட்சித் தலைவனாக அவரை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தின. என்றாலும் கலைப்புரட்சியை முன்னின்று நடத்தவும், கவிதைப் புதுமையை நிலைநாட்டவும், கவிதை (Poetry) ஊழிக்காற்று (Blast) போன்ற சிறிய விடிவெள்ளிப் பத்திரிகைகளை நடத்தவும் அவர் தேவைப்பட்டார்; அவர் புயல் உழைப்பாளி.

தமது 27 ஆம் வயதிற்குள் பவுண்ட் ஐந்து படைப்புக்களை வெளியிட்டார்.அவருடைய துவக்ககாலக்கவிதைகள், பழமையான பிரெஞ்சுக்கவிதை மற்றும் ஆங்கிலப் புதுக்கவிதைகளின்