பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59முருகு சுந்தரம்

இந்த நேரத்தில்
இவர்களின் அவசரத்தேவை
வசன மென்னும காரைப் பூச்சு:
சலவைக் கல்லோ
சந்தச் சிற்பமோ அல்ல.

என்று கூறுகிறார்.

மாபெர்லி கவிதை, சங்கிலித் தொடரான கலை நுணுக்கச் சாதனைகளும், முரட்டு வேகம் கலந்த காட்டாற்றுக் கருத்தோட்டமும், ஒழுங்குக்குட்பட்ட நினைவலைகள் இடைவெட்டும் உணர்ச்சிமயமான மேற்கோள்களும் நிறைந்தது. பவுண்ட் இக்கவிதையைப் பற்றிக் குறிப்பிடும்போது இது உணர்ச்சியின் சரியான பதிவு. “இது குறிப்பிட்ட ஒரு காலத்தில் குறிப்பிட்ட ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட அனுபவம்; இது வாழ்க்கையின் இன்பியல் துன்பியல் இரண்டையும் குறிப்பிடும் காவியம். ஆர்னால்டின் தேய்ந்துபோன தொடரான வாழ்க்கையின் ஆய்வு (Criticism of life) என்பது இதற்குச் சிறப்பாகப் பொருந்தும்” என்று கூறுகிறார்.

பவுண்டின் படைப்புக்களில் எல்லாராலும் அதிகம் பேசப்படுவதும், திறனாய்வுக்கும், கண்டனத்துக்கும், பாராட்டுதலுக்கும் உட்படுத்தப்படுவதும் அவருடைய காண்டங்கள்[1] (Cantos) ஆகும். இக்காண்டங்கள் பவுண்டின் ஆழ்ந்த சிந்தனையில் முளைத்த தனிமொழிகள் (Monologues). இவற்றை எழுதிமுடிக்கப் பவுண்டுக்குக் கால் நூற்றாண்டுகள் பிடித்தன. முதல் பதினாறு காண்டங்கள் 1925-ஆம் ஆண்டிலும், மற்ற காண்டங்கள் அடுத்த இருபது ஆண்டுகளிலும் வெளியிடப்பட்டன. பைசா நகருக்கு அருகில் சிறை வைக்கப்பட்டபோது, அவர் பத்துக் காண்டங்கள் எழுதினார். அவை பைசா காண்டங்கள் (Pisan Cantos) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டன. எல்லாமாகச் சேர்த்து எண்பத்தைந்து காண்டங்கள் இந்நூலுள் அடங்கும்.

இக்காண்டங்கள் வெளியான புதிதில் இதைப்படிக்க முயன்றவர்கள். ஏதும் புரியது விழித்தனர். இவை ஏதேர் மறை சொற்களால் (Code) எழுதப்பட்டவை என்றும், ஏற்றதிறவு கோல் இல்லாமல் இவற்றுக்குள் நுழைய முடியாது என்றும் கூறினர். இக்கூற்றினை முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. இக்காண்டங்கள் புரிய வேண்டுமானால் ஹோமரின் ஒதீசியத்தை (Odyssey) உள்ளத்தில் நினைத்துக் கொண்டு படிக்கத் தொடங்க வேண்டும். கிரேக்கக் காப்பியத்தலைவன் ஒதீசியஸ் திராய் நகரப் போருக்குப்பின் கப்பலில் தன் தாய் நாடு திரும்புகிறான்.

  1. 'Canto' என்பது காப்பியப் பகுப்பு. இதை சமஸ்கிருதத்தில் 'காண்டம்' என்று குறிப்பிடுகிறோம்.