பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

630முருகு சுந்தரம்

பிறகு பவுண்ட் விசாரணையின் நிமித்தம் வாஷிங்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைச் சோதித்த மருத்துவர்கள், அவரை ஒரு மனநோயாளி என்று முடிவு செய்தனர். அதனால் விசாரணையிலிருந்தும், மரண தண்டனையிலிருந்தும் விடுபட்டு, செயிண்ட் எலிசபெத் மன நோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அவர் இருந்தபோது அவருடைய சிறைக் கவிதைகளுக்கு (Pisan cantos) அமெரிக்க நூலகப் பேராயத்தால் (Fellows of library) போலிங்கன் பரிசு (Bollingan prize) வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு எதிரான அரசியல்வாதிகளும இலக்கிய வாதிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்தப் போராட்டம் பல மாதங்கள் நீடித்தது.

பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, அவருடைய தள்ளாமை கருதி, மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் மீது சாட்டப்ப்ட்ட குற்றங்கள், அவருடைய புத்தி பேதலிப்பின் விளைவு என்று கருதி அமெரிக்க அரசாங்கம் அவர் மீதிருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. மருத்துவ மனையை விட்டு வெளியேறியதும் பவுண்ட் மீண்டும் இத்தாலிக்கே திரும்பிவிட்டார்.

“சுதந்திர பூமி என்று சொல்லப்படும் அந்த நாட்டிலிருந்து விடுதலை பெற்றதற்காக நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்; அமெரிக்கா ஒரு பயித்தியக்கார விடுதி” என்று அறிவித்தார் பவுண்ட்.