பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒவ்வொரு கலையிலும் சிறப்புத் துறைகள் (Specialization) தோன்றிக்கிளைத்தன. ஓர் இயற்பியல்வாதியின் மொழி மற்றோர் இயற்பியல்வாதியாலும், ஒரு துறையைச் சார்ந்த சிற்பி, ஓவியர் அல்லது இசை மேதையின் நுட்பம், அவ்வத் துறையைச் சார்ந்த கலைஞர்களாலும் மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டன. இப்பாதிப்பு கவிதையிலும் தனித் தன்மை வாய்ந்த, சிறப்புப் பிரிவுகளைத் தோற்றுவித்தது.

உரைநடையிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவதற்காகக், கவிதை இவ்வளவு காலமாகத்தான் அணிந்திருந்த செழுமை, இருண்மை மயக்கும் மந்திரம் ஆகிய அணிகலன்களை இழக்க வேண்டி நேரிட்டது.

சமகால மக்களோடு பேசுவதற்காகவும், அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகவும், டிரைடன், போப், பைரன், டென்னிசன் போன்றவர்கள் கவிதை மொழியின் சில பண்புகளைத் தியாகம் செய்தனர். டன் , காலெரிட்ஜ், பிளேக், ஹாப்கின்ஸ் போன்ற கவிஞர்கள் தங்களுக்கென்று ஒரு குறுகலான வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, தங்கள் வாசகர்களின் அளவைக் குறுக்கிக் கொண்டனர்.

ஆனால், கவிதைத் துறையில் உண்மையான புரட்சியை உண்டாக்கிக் கவிதைப்புதுமை (Modernism in Poetry) யைத் தோற்றுவித்தவன் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பதினாறு வயது இளைஞன் ரெம்போ. அவன் கவிதை எழுதியது மூன்றாண்டுகள் மட்டுமே. அம் மூன்றாண்டுகளில் அவன் எழுதிய கவிதைகள் ஐரோப்பியக் கவிதையுலகையே தலை கீழாகப் புரட்டிவிட்டன. என்றாலும், ரெம்போ என்னும் உதய சூரியனுக்கு விடிவெள்ளியாக முன்னால் நின்றவர் பிரெஞ்சு மகாகவி போதலேர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

போதலேரின் ‘மாநகரக் கொள்கை’யை அப்படியே ஏற்றுக் கொண்டதோடு, விடலைப் பருவக் கனவுகளையும் உணர்வுகளையும் மிகத்துல்லியமாகத் தன் படைப்புகளில் முதன் முதலாக வெளிப்படுத்துகிறான் ரெம்போ.

இந்த கோபக்கார இளைஞன் (angry young man) பழமையோடு தொடர்பு கொண்ட சமயம், அரசியல், பொது ஒழுக்கம் ஆகியவற்றை மறுதலித்ததோடு, கவிதை மொழியையும் எதிர்த்துப் புரட்சி செய்தான். கவிதைச் சொற்களின் இயல்பான பொருளையே மாற்றினான். உரை நடையிலேயே உயர்ந்த கவிதைகளை எழுதினான்.

கடவுள் மதம் ஆகியவற்றில் நம்பிக்கை வைக்காத ரெம்போ, “ஒரு கவிஞன் தன்னையே ஞானியாக்கிக் கொண்டு, தன் ஆன்மாவைத் தேடி சோதித்துணர்ந்து அதைப் பண்படுத்திக் கொள்வதன் மூலம் ‘பாவ விமோசனம்’ பெறலாம்” என்று கூறியிருக்கிறான்.