பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்70

கொள்ள வேண்டும். மரபையும், புதுமையையும் சுவைத்து மகிழ வேண்டுமானால், இலக்கியத்தின் தொடர்ந்த வராற்றறிவைப் பெற்றிருக்க வேண்டும்” என்று மரபின் உயர்வை எலியட் எடுத்துக் கூறுகிறார்.

எலியட் மரபை மதித்துப் போற்றிய அதேநேரத்தில், மரபின் குறைகளையும் எடுத்துவிளக்கினார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆங்கிலக் கவிதை மரபு தேய்ந்து இற்றுப் போன நிலையில் இருந்தது. கவிஞர்கள் தேய்ந்த பழம்பாதையிலேயே சலிப்பின்றி நடந்தனர். புதிய சிந்தனையோ தனித் தன்மையோ அவர்கள் படைப்பில் இல்லாமல் போயிற்று. வோர்ட்ஸ்வொர்த் பாடிய வானவில்லையும், குயிலையும், ஏரிக்கரை மலர்க் கூட்டத்தையும் திரும்பத்திரும்பப் பாடிக் கொண்டிருந்தனர். இப்பாடல்கள் எளிமையோடும் கற்பனையழகோடும். இனிய சந்த நயத்தோடும் இயற்கையையே சுற்றிச் சுற்றி வந்தன. கவிதைகள் நிறைய எழுதப்பட்டன. ஆனால், அவற்றின் தரம் மிகத்தாழ்ந்திருந்தது.

எளிதான இப்போக்கை மாற்றி தீவிரமான ஒரு கவிதைப் போக்கை உருவாக்க நினைத்தார் எலியட். கவிதை, சிக்கனம், சுருக்கமும், நுணுக்கமும், சிக்கலும் உடையதாக இருக்கவேண்டும் என்று கருதினார். ஒரு சிலரே புரிந்து கொண்டாலும், கவிதை தரமாக இருக்கவேண்டும் என்பது அவர் கருத்து. எனவே கவிதையின் உள்ளடக்கத்திலும், உருவத்திலும் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினார்.

காதலும், வீரமும், இயற்கையும் மட்டுமே கவிதையின் பாடு பொருள் என்ற நிலையை மாற்றி, அவர் வாழ்ந்தகாலத்தில் அவரைச் சுற்றியிருந்த ஒவ்வொரு பொருளைப்பற்றியும், அவரைப்பாதித்த ஒவ்வோர் உணர்வையும் பாட்டில் வடிக்க விரும்பினார். “கவிஞன் தனக்குப் பாடு பொருளாக அழகான உலகை மட்டுமே தேடிச் செல்லக் கூடாது. அழகு, அழகற்ற தன்மை இரண்டையும் ஆராய வேண்டும். புகழ், சலிப்பு, அருவருப்பு யாவையும் அவன் பாடலில் இடம்பெற வேண்டும்” என்று கவிதையின் பயன் (The use of Poetry) என்ற தமது நூலில் எலியட் குறிப்பிடுகிறார்.

பேருந்துகளின் பேரிரைச்சலும், டிராம் வண்டிகளின் கடகட வொலியும், வான ஊர்திகளின் பெருமூச்சும் அவர் பாடல்களில் எதிரொலிக்கின்றன. போரின் கொடுமைகளையும், நகரமக்களின் அவலங்களையும், போலி நாகரிகத்தின் அலங்கோலங்களையும், ஏமாற்றத்தாலும் ஏக்கத்தாலும் பாதிக்கப்பட்டு மனநோயாளிகளாகத் திரியும் மக்களின் துயரங்களையும், சமயத்தின் போலித்தனங்களையும் பாடு பொருளாக்கினார். சாதாரண மக்களின் இன்பதுன்பங்களை, அவர்கள் பேச்சிலேயே கவிதையாக்கினார். தமக்கு முன்னோடியாகச் சில கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து, அவரிடமிருந்த சிறந்த