பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71முருகு சுந்தரம்

கவிதைப் பண்புகளைத் தாம் வர்த்துக் கொண்டார். போதலேரின் கருத்துச் செறிவையும், ஜான்டன்னின் ஆழ்ந்தகன்ற பல்துறை அறிவாக்கத்தையும், லாஃபோர்க்கின் சுருக்கத்தையும், தாந்தேயின் செட்டான கவிதை நடையையும், பவுண்டின் படிம உத்தியையும் தம் படைப்பில் ஏற்றுக் கொண்டார்.

பிற கவிஞர்களின் படைப்புக்கள் மட்டுமன்றி இசை, சிற்பம், ஒவியம் போன்ற கலைகளின் நுட்பங்களும் உத்திகளும் அவற்றின் புதிய வளர்ச்சிகளும் எலியட்டின் படைப்பைப் பாதித்தன. அவருடைய ‘பாழ் நிலம்’ (Waste Land) என்ற கவிதையில் காணப்படும் சந்த வேறுபாடுகளும், மடக்குகளும், சேர்ந்திசையாக ஒலிக்கும். எனவே ஐ. ஏ. ரிச்சர்ட்ஸ் என்ற அறிஞர் எலியட்டின் கவிதைகளைக் ‘கருத்திசை’ (the music of ideas) என்று குறிப்பிடுகிறார்.

ஒரு பாடகனின் வரிசைப் படுத்தப்பட்ட இசைத் தொடர்கள், நமக்குக் கருத்துக்களை உணர்த்துவதை விட, இடையீடில்லாத இன்ப உணர்ச்சியில் நம்மை ஆழ்த்தி மெய்மறக்கச் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன. ‘ஒரு நல்ல கவிதை புரிந்து கொள்வதற்கு முன்பாகவே, படிப்பவரின் உள்ளத்தில் நுழைந்து விட வேண்டும்’ என்று எலியட் குறிப்பிடுவது இதைத்தான். மையக் கருத்தைப் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே, அக்கவிதையில் உள்ள படிமங்கள், குறியீடுகள், சந்தநயம் ஆகியவற்றை உள்ளத்தில் நன்கு, படியவிட்டுப் படிப்படியாக அதன் முழுமையை நெருங்க வேண்டும்.

எலியட்டின் கவிதையிலுள்ள இருண்மை வேண்டுமென்றே அவர் விரும்பி மேற்கொண்டது தான். அவர் தம் கவிதைக் கருத்துக்களைக் குறிப்பாகவும், மறை முகமாகவும், சிக்கலாகவும், மேற்கோள்கள் நிறைந்ததாகவும் வெளிப்படுத்துவார். சிலசமயங்களில் தம் கருத்து வெளிப்பாட்டிற்கு ஆங்கிலம் போதவில்லை என்று கருதினால், வேறு மொழிகளையும் இடையிடையே கையாளுவார். சில சமயங்களில் சொற்களின் பொருளையே கூட மாற்றி வடுவார். ஹோமர் முதல் தற்காலப் படைப்பாளர் நூல்களிலிருந்தும், இந்துமதம், புத்தமதம் பிற கீழைநாட்டு மதங்களிலிருந்தும், தொன்மையான புராணங்களிலிருந்தும், விவிலியத்திலிருந்தும், விளம்பரமில்லாத கட்டுக்கதைகளிலிருந்தும், பலதுறைத் தத்துவங்களிலிருந்தும் மேற்கோள்களையும், மரபுத் தொடர்களையும் அள்ளித் தெளித்துக் கொண்டு போவார். படிப்பவர் அவற்றில் முட்டிமோதிக் கொண்டு மூச்சுத் திணறுவர். ‘பாழ் நிலம்’ என்ற கவிதையில் மட்டும் இருபத்தைந்து வேறுபட்ட எழுத்தாளர்களின் மேற்கோள்களும், ஆறு வேறு மொழிகளில் எடுத்தாளப்பட்ட பகுதிகளும் இடம் பெற்றிருக்கின்றன. எலியட்டின் செறிவான இக்கவிதைப் பாணியை ஐ.ஏ