பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73முருகு சுந்தரம்

ஒப்பீடுகளாகத் (Objective Co-relative) தொன்மங்களிலும், கட்டுக் கதைகளிலும் இடம்பெற்ற பாழ்நிலங்களை, பாத்திரப் படைப்புகளையும், நிகழ்ச்சிகளையும் கோவைப் படுத்திக் காட்டுகிறார். சமுதாயத்தில் எல்லாத் துறைகளிலும் நிலவிய மலட்டுத் தனமே பாழ்நிலமாக உருவகிக்கப்படுகிறது, கவலையும், ஏமாற்றமும், பாலுணர்வு வக்கிரமும், அறிவுப் பேதலிப்பும் ஏற்ற பாத்திரப் படைப்புகள் மூலம் திறமையாக வெளிப்படுத்தப்படுகின்றன, இக்குறைகள் நீங்கிப் பாழ்நிலம் செழிக்கச் சில முயற்சிகளும் சடங்குகளும் மேற்கொள்ளப் படுகின்றன. அச் சடங்குகளின் இறுதியில் வானத்தில் மேகங்கள் திரள்கின்றன. இடிமுழக்கம் கேட்கிறது. மழை வரும், நாடு செழிக்கும் என்ற நம்பிக்கையோடு காப்பியம் முடிகிறது. பாழ்நிலத்தில் எலியட் பாலுணர்வை அருவருப்போடும், அதன் எழுச்சியைத் துன்பத்தோடும் சித்தரிப்பதோடு, அதைக் குறிப்பிடும் இடங்களிலெல்லாம் முகஞ்சுளித்துத் திரும்பிக் கொள்கிறார்.

எலியட்டின் பாழ்நிலம் பற்றிப் பல்வேறு விதமான முரண்பட்ட கருத்துக்கள் இலக்கிய அறிஞர்களால் பேசப்படுகின்றன. இக்கவிதை சிலரால் சரியாகவும், சிலரால் தவறாகவும் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. “உலகப் போருக்குப் பின் வாழ்ந்த, சமுதாயத்தின் மனமயக்கத்தையும், குழப்பத்தையும், ஆன்மீக வறட்சியையும் இக்கவிதை குறிப்பிடுகிறது” என்று அறிஞர் எஃப். ஆர். லீவிஸ் எழுதுகிறார்.

“இக்கவிதை சமுதாயத்தில் நிலவிய கோளாறுகளின் சோதனையே அன்றித்தீர்வு அன்று; இது மறைந்து போன புகழையெண்ணி விடுகின்ற இலக்கியப் பெருமூச்சு” என்றும். ‘இது புலமையுடன் இணைக்கப்பட்ட இலக்கிய மரவேலை’ என்றும், ‘படித்த முட்டாள் தனத்தின் தொகுப்பு’ என்றும் பலவாறாகப் பல்வேறு அறிஞர்களால் கண்டனம் செய்யப்பட்டுள்ளது.

இக் கண்டனங்களுக்கு மாறாக ‘இதுவொரு சமுதாயச் சான்றுப் பட்டயம் (a Social document); நடப்பு உலகத்தினர் உண்மையான மறுபதிப்பு’ என்று பாராட்டிக் கூறுவோரும் உளர்.

எலியட், கவிதைகள் மட்டுமன்றி, நுட்பமான இலக்கியத் திறனாய்வு நூல்களும், நல்லநாடகங்களும் எழுதியிருக்கிறார். என்றாலும் அவருக்கு அழியாப் புகழையும், நோபெல் பரிசையும் தேடித் தந்தது பாழ்நிலமே. துவக்க காலத்தில் எலியட். எழுதிய ‘ப்ருஃப் ரோக்கின் காதற் பாடல்’ The Love, Song of Alfred Prufrock மிகவும் விளம்பரம்பெற்றது, எல்லாராலும் விரும்பிப் படிக்கப்படுவது. இதைப்பற்றி எஃப். ஆர். லீவிஸ் குறிப்பிடும்போது, “இக்காதற் கவிதை 19-ஆம் நூற்றாண்டு இலக்கிய மரபிற்கு முற்றிலும் மாறானது; புரட்சிகரமானது.