பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரெம்போவின் தாக்கம் பிரெஞ்சுக் கவிதை மீதும், மற்ற ஐரோப்பியக் கவிதைகள் மீதும் அளவிடமுடியாத அளவு இருந்தது. ஏற்கெனவே பிரெஞ்சு நாட்டில் குறியீட்டியக்கம் கால் கொண்டிருந்தது, மல்லார்மே, வெர்லேன் போன்ற குறியீட்டுக்கவிஞர்கள் பழஞ் சிறப்பியச் சிம்மாசனத்திலிருந்து கவிதையைக் கீழே இறக்கி, அதன் வடிவத்தில் புதிய சோதனை முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர். உளவியல் அறிஞரான ஃப்ராய்டின் ஆய்வுகள் கலையிலக்கியத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களைத் தோற்றுவித்தன ‘புற மெய்ம்மையிய’ (Surrealism) இயக்கம் தோன்றியது.

பண்டைய மரபுகளைப் புறக்கணித்தல், உள்ளத்தைச்சுதந்திரமாக வைத்துக்கொள்ளுதல், கனவுகளில் மூழ்கியிருத்தல், மிகைக்கற்பனைகளில் ஈடுபடுதல், அகக்காட்சிகளின் துணையால் புறவுலகைப் புரிந்து கொண்டு வாழ்வின் அடிப்படை உண்மைகளை அறிதல்யாவும், புறமெய்ம்மை இயக்கத்தின் பண்புகள் ஆகும். இவ்வியக்கம் 1924-இல் ஆந்தர் பிரெடன் என்பவரால் முறையாகத் தோற்றுவிக்கப்பட்டாலும், இதன் அடிப்படைக் கூறுகள் எல்லாம் ரெம்போவின் படைப்புகளில் முழுமையாகப் பொருந்தியிருக்கக் காணலாம். எனவே புற மெய்ம்மை இயக்க முன்னோடி ரெம்போதான் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

இந்த நூற்றாண்டின் ஒப்புயர்வற்ற ஆன்மீகக் கவிஞன் என்றும், மிகச் சிறந்த தன்னுணர்ச்சிக் கவிஞர்களுள் ஒருவன் என்றும் குறிப்பிடப்படுபவன் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ரெய்னர்மேரியா ரில்க். இவன் பழமையில் நம்பிக்கையற்றவன். இவனுடைய சிந்தனை வளர்ச்சியை, கலை நுணுக்கச் செம்மையில் ஈடுபட்டிருந்த குறியீட்டாளர்கள், வெறித்தனமாகச் சூன்யத்தைப் பின் தொடர்ந்து சென்ற ரெம்போ ஆகியோரின் வளர்ச்சிக்கு அடுத்த வளர்ச்சியாகக் கொள்ளலாம். தன்னையே அழித்துக்கொள்ளும் உலகப் பெரும்போருக்கு எதிரான மக்களுணர்ச்சி பெற்றெடுத்த குழந்தையாக இவனைக் குறிப்பிடலாம். இவனுடைய கவிதைகளில் இருண்மைக் கூறு மிக அதிகம்.

“என் பாடல்கள் இறுக்கமும் சுருக்கமும் மிக்கவை. இவற்றை ‘அறிந்து கொள்ளுதல்’ என்பதைவிட ‘உள்ளுணர்வால் உணர்ந்து கொள்ளுதலே’ படிப்போரால் இயலும்” என்று ரில்க்கே ஓரிடத்தில் குறிப்பிடுகிறான். அவனுடைய உண்மையான உலகம் கண்ணுக்குத் தெரியாத மெய்ப்பொருள் உலகமே (World of Spirit). அவ்வுலகின் உண்மையை உணர்ந்து துய்க்க, பொய்யான இப்பருப் பொருள் உலகில், அன்பும் மனிதத் தன்மையுமே வழி என்று குறிப்பிடுகிறான். இம் முயற்சியில் தேவதைகளையும் துணைக்கழைக்கிறான்.

இதே ‘ஆன்மீகத் தேடல்’ , பேகய், டி. எஸ். எலியட், டி. எச். லாரன்ஸ், டிலான் தாமஸ், ராபர்ட் லோவல் ஆகியோரின் படைப்புக்களில் வெவ்வேறு வடிவம் கொள்ளுகின்றன. இதற்கு நேர்மாறாகச் சமதர்மக் கவிஞர்கள் ஒரு பூலோக