பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83முருகு சுந்தரம்

எனக்கு ஒளியும்
ஈரமழையும் நீதான்.

நீ-
எனது தேவன்;
தலைவன்.
நான்-
கறுப்புமண் :
வெள்ளைப் பக்கம்.

தன்னைத் தாராளமாகத் தனது 'தலைவர்'களிடம் ஒப்படைத்துக் கொண்ட இத்தன்மையால், தான் மதித்துப் போற்றிய 'கவிஞர் அக்ம டோவா' விடமிருந்து இவள் வேறுபடுகிறாள். இலக்கிய வாதிகள் அக்மடோவாவைப் 'பாதிப் பரத்தை; பாதித் துறவி' என்பர், ஸ்வெட்டேவாவுை 'முழுப் பரத்தை' என்பர்

1920 - இல் அவள் எழுதியுள்ள மற்றொரு கவிதையில்

என்னிடம்-
பேசத் தேவையில்லை.
இதோ என் இதழ்கள்,
அருந்த!
இதோ என் கூந்தல்,
வருட!
இதோ என் கைகள்,
முத்தமிட!
இல்லையென்றால்...
நாம் உறங்குவோம்!

என்று துணிச்சலாக, நாணமின்றிப் பாடுகிறாள்.

எந்த ஒரு புதுக் கவிஞரும் காதற்பிரிவினால் ஏற்படும் துன்பங்களை ஸ்வெட்டேவாவைப்போல் உணர்ச்சி பொங்கப் பாடவில்லை என்று நிச்சயமாகக் கூறலாம் (1921-இல் உள் நாட்டுப் போரில் கணவனைப் பிரிந்த போதும், 1925-இல் பிராகுவில் தன் காதலனைப் பிரிந்தபோதும், அவள் பாடிய காதற் கவிதைகள் படிப்பவர் உள்ளத்தை உணர்ச்சிப் பிழம்பாக்கும் தன்மையன. அந்த வகையில் அவள் எழுதியுள்ள ‘மலைப்பாட்டு’ (Poem of the Mountain), இறுதிப்பாட்டு (Poem of the End) இரண்டும் குறிப்பிடத்தக்கவை ‘இறுதிப் பாட்டில்’ - ‘பிரிவு’ என்னும் சொல் மாஸ்கோவில் உள்ள நாற்பது முறைக்கு நாற்பது மாதாகோவிலின்' (Forty times forty churches) மணியோசை போலச் சோகமாக ஒலிக்கின்றன. ஸ்வெட்டேவாவின் காதற்கவிதைகள் படிப்பவர் உள்ளத்தில் “ஓர் உறவை-நெருக்கமான உறவை அவளோடு ஒன்றாகப் படுக்கையில் உறைவதற்கும் மேலான உறவைப்” புலப்படுத்துவதாக ஓர் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.