பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொர்க்கத்தைத் தம் கற்பனையில் படைக்கத் தொடங்கினர். மார்க்சியக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெர்டோல்ட் ப்ரெக்ட். ரில்க்தனிமனிதனின் ஆன்ம தரிசனத்தைப் பாடியவர். ப்ரெக்ட் மக்கட்சமுதாயத்தின் ஏக்கங்களைப் பிரதிபலித்த சீர்திருத்தவாதி, ரில்க் சீமாட்டிகளின் மடியிலமர்ந்து ஆன்மாவைப் பற்றிச் சிந்தித்தவர்; ப்ரெக்ட் தெருவோர்த்திலமர்ந்து ஏழ்மையைப் பற்றிச் சிந்தித்தவர். ரில்க்கின் கவிதை அறிவை மயக்கும் புதிர்க்கவிதை (mystic poetry). ப்ரெக்டின் கவிதை அன்றாட வாழ்க்கையை ஆய்வு செய்யும் நடப்பியக் கவிதை (Functional poetry) இதைப் புதிய மெய்ம்மையியம் (New Realism) என்றும் சொல்லலாம்.

தற்பெருமை, தத்துவார்த்தம், பிரபஞ்ச ரகசியம், அடிமனக் கற்பனை என்பவற்றைப் பாடு பொருளாகக் கொண்டுவரும் கவிதைகட்கு எதிரானது நடப்பியக்கவிதை. நேர்ப்படும் உண்மைகளை உள்ளது உள்ளபடியாகத் தரமான கவிதைகளில் அறிவார்ந்த சிந்தனையோடு வெளிப்படுத்த வேண்டும் என்று நடப்பியற் கவிஞர்கள் விரும்பினர்.

ப்ரெக்ட் கவிதையின் எல்லாச் சட்ட திட்டங்களையும் உடைத்தெறிந்து விட்டு எழுதினார்; தமது கருத்துக்களை மக்களுக்கு வன்மையாகக் கூறும் கண்டிப்பான ஆசிரியராக விளங்கினார். முன்னோக்காளர் இயக்கம் (Futurist movement) ருசியாவிலும், இத்தாலியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பரவியது, ப்ளாக், எஹ்ர்ன், போர்க், மாயகோஸ்ஸ்கி ஆகியோர் முன்னோக்கியத்தை ஆதரித்த முன்னோடிக்கவிஞர்கள். இத்தாலி நாட்டைச் சேர்ந்த டி’அன்னன்ஸியோ, மாரினெட்டி ஆகிய இரு கவிஞர்களும் ஃபாசிலியத்தின் தத்துவத் தந்தைகளாகக் கருதப்படுகின்றனர். முன்னோக்கியமும், ஃபாசிஸமும் தனிமனித சுதந்திரத்தை (individualism) முற்றாக வெறுப்பவை.

விளாடிமிர் மாயகோவ்ஸ்கி ருசியப்பொதுவுடைமைக் கொள்கையால் கவரப்பட்டு, அதன் புரட்சிக் குரலாக ஒலித்தவர். அவர் எழுதிய கட்டற்ற கவிதை, வால்ட் விட்மன், அப்போலினர், மாரினெட்டி ஆகியோரைப் பினபற்றிப் புரட்சியின் திடீர் வேகத்தோடும், குத்தூசிக் கிண்டலோடும் எழுதப்பட்டவை: ஆலைத் தொழிலாளர்களின் கூட்டங்களில் அடிக்கடி பாடப்பட்டு, ருசிய மக்களிடையில் அதிக விளம்பரம் பெற்றவை.

இந்த நூற்றாண்டுக் கவிஞர்களுள், அதிகமாக உலக இலக்கிய வாதிகளின் கவனத்தைக் கவர்ந்தவர்கள் இருவர்; அவர்கள் டி. எஸ். எலியட்டும், எஸ்ரா பவுண்டும்.

டி.எஸ். எலியட் கிறித்தவ சமயத்தின்பால் அதிக ஈடுபாடு கொண்ட ஆன்மீகக் கவிஞர். வாழும் காலத்திலேயே பெருங் கவிஞராகவும் இலக்கிய மேதையாகவும் மதிக்கப்பட்டு எல்ல்லாராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டவர், இவரது படைப்பிலுள்ள இருண்மையின் காரணமாக அருவக் கவிஞர் (invisible poet