உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

55

மதுரத் தமிழ் காக்கும் மயிலை சிவமுத்து


எளியநடை; எளியஉடை; எளிய வாழ்க்கை;
               எப்போதும் தமிழ்மொழியை வளர்க்குந் தொண்டு;
வெளிநடிப்பை, விளம்பரத்தை, விரும்பா உள்ளம்;
               வித்தைக்கு முத்து; இவர் மயிலை முத்து.
பிளவுதனை உண்டாக்கும் சாதி பேதப்
                பிரிவினையை எதிர்கின்ற வடலூர் வள்ளல்.
விளக்கேற்றி வைத்துவரும் பெரியார்; கல்வி
                விழிப்புதனை உண்டாக்கும் பாண்டி வேந்தன்!

நெருப்புக்குப் புகைஉண்டு; ஆனால் விண்ணில்
                நீந்துகின்ற கதிருக்குப் புகையேன் இல்லை ?
இரவினிலே தாமரைப்பூ தூங்கு வானேன் ?
               இலைப்பந்தல் போடுகின்ற மரங்கள் யாவும்,
தரைமீது நடக்காமல் நின்று கொண்டே
                தவிப்பானேன் எப்போதும் ? என்று பிஞ்சுப்
பருவத்தில் தன் தந்தை இடத்தில் கேட்டுப்
                 பகுத்தறிவுத் திறமைதனை வளர்த்த மேதை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/57&oldid=1871890" இலிருந்து மீள்விக்கப்பட்டது