பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் • 157

பேய்த்தனம் பெற்றுத் தன்னை வெகுவாகத் தாக்கி விடக்கூடும் என்ற அச்சம் அவரைப் பிடித்தாட்டியது. அந்தச் சூழ்நிலையில், கன்னக் கனிந்த இருளில், தனித்து விடப் பட்டதனால் அவருள் இனம் புரிய முடியாத ஒரு கலவரமும் பயமும் புகுந்து கொண்டன. அத்துடன் செத்துப் போவோமோ எனும் அச்சமும் சேர்ந்து பிறாண்டியது.

ஆண்டபெருமாள் தவியாய் தவித்தார். கத்த வேண்டும் என்ற உணர்வு அவரை உந்தியது. ஆனால் கத்துவதற்கு நாவும் வாயும் வழி செய்யவில்லை. தனது இயலாமையை எண்ணி, தனக்கு நேர்ந்துவிட்ட இந்த நிலையை எண்ணி கண்ணிர் வடித்தார்.

மழையும் காற்றும் வெறிக் கூத்து ஆடிக் கொண் டிருந்தன. நெடுகிலும் மின்னல் இடைக் கிடை பளிச் பளிச் சென ஒளிநாட்டியம் ஆடியது.

செயலற்று மிரண்டு குழம்பும் மிருகம் போலானார் அவர். எப்படியாவது எழுந்து நடந்து கதவருகில் சென்று கதவைத் தட்ட வேண்டும்; உள்ளே இருப்பவர்கள் திறக்கிற வரையில் தட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று உள்ளுணர்ச்சி அவரை இயக்கியது.

முயன்று போராடி எழுந்தார். நிற்க முடியவில்லை. தள்ளாடியது. சுவரைப் பிடித்துக் கொண்டு சமாளித்தார். பலவீன நிலையில் நடக்க இயலவில்லை. தலை கிறு கிறுத்தது. மேலே போர்த்தியிருந்த துணி கால்களைச் சுற்றி விழுந்து தடங்கல் ஏற்படுத்தியது. மீறி நடக்க முயல்கையில், சாக்கு மடிப்புண்டு இடறி விட்டது. நிலைதவறி அவர் கீழே விழுந்தார். தலை கதவுமேல் மோதியது. கதவின் மீது அலங்காரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புக் குமிழ் களில் ஒன்று சரியானபடி விசாரித்தது. அவ்வளவுதான். அப்புறம் அவருக்கு எவ்வித உணர்வுமில்லை.