பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகாலையில் கண்விழிக்கும் போதே அவனுள் ஆயிரம் பூக்கள் மலர்ச்சியுற்றது போல் ஒரு புத்துணர்வு படர்ந்தது. வழக்கத்தை விட அதிகமான உற்சாகமும் விசேஷமான குதுகலிப்பும் பாய்ந்து பரவுவது போல் இருந்தது.

புலர்ந்தும் புலராத அந்தப் புதுநாள் அவனுக்காக ஏதோ அதிசயங்களை வைத்துக் கொண்டு காத்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. என்னவோ புதுமையாக நிகழ இருப்பது போல - ஏதோ ஒரு புதிய அனுபவம் சித்திக்கப் போவது போல - அதை எதிர்பார்த்து, விழிப்புற்றது போல் அவன் உள்ளம் சிலிர்த்தது.

உலகம் மிக இனியது என்று அவன் பார்வை பிடித்துத் தந்த ஒவ்வொன்றும் அவனுக்கு உணர்த்தியது.

செம்மை பெற்று வந்த கிழக்கு வானத்தின் ஒளி வீச்சு எங்கும் பரவிய ஒளியை வரவேற்று ஆரவாரித்த பறவை இனங்களின் மகிழ்ச்சி ஒளிகள் மரங்களின் பச்சைப் பசிய இலைக் கூட்டங்கள் நீல்வானம் எல்லாமே விழித்தெழுந்த சந்தோஷத்துக்கு உரமூட்டின.