பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 புண்ணியம் ஆம் பாவம்போம்:

அவற்றைப் பெறுகிறவர்கள் ஒவ்வொருவரும் இருபது பேர்களுக்கு அனுப்பி இந்த விதமாக ஸ்ரீ வெங்கடாசல பதியின் பெருமை பரவுவதற்கு வகை செய்ய வேண்டும். இச் சங்கிலி தொடர்ந்து வளர வளர உனது வாழ்க்கையில் வளங்கள் பெருகும்; சந்தோஷம் அதிகரிக்கும். இதை அனுபவ பூர்வமாக அறியலாம். வெங்கடாசலபதி சகாயம்.

ஒரு தடவை அவனை வள்ளலாக மதித்து ஐநூறு ரூபாய் கடன் கேட்டது ஒரு கடிதம். மகளை கல்லூரியில் சேர்ப்ப தற்காகப் பணம் தேவை என்று எழுதியிருந்தார் ஒரு அன்பர். அன்றாடச் செலவுகளுக்கே இழுபறி நிலையில் இருக்கிற அவனிடம் ஐநூறு ரூபாய் கடன் கேட்டு ஒருவர் எழுதியது பெரிய தமாஷாகப் பட்டது அவனுக்கு.

இவர்கள் எல்லாம் எப்படித் தான் அவனுடைய விலாசத்தை அறிந்து கொள்கிறார்களோ என்ற ஆச்சர்யமும் அவனுக்கு ஏற்பட்டது. -

அதே மாதிரி அன்றும் ஏதாவது ஒரு கடிதம் வந்தாலும் வரலாம். ஏன் வரக் கூடாது? இது அவனது மனக் குறுகுறுப்பு.

ஆனால் அன்றைய தபால் அற்புதமான அல்லது விபரீதமான, குதூகலமான அல்லது ஆனந்த மயச் செய்தி எதையும் கொண்டு தரவில்லை. வழக்கமான சாரமற்ற விஷயங்களே வந்திருந்தன.

அது அவனுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. விழித் தெழுகையில் அவனுள் பூத்த பல நூறு பூக்களும் வண் ணங்கள் ஒளிரச் சிரித்துக் குலுங்குவதாக அவனுக்குத் தோன்றியது. வளரும் பொழுதோடு அவனுடைய உணர்வுக் குதுகலிப்பும் அதிக உயிர்ப்பு பெறுவது போலிருந்தது.