பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 175

யாருக்காகவோ அல்லது எதுக்காகவோ தான் காத்தி ருப்பதாக அவனுக்குப் பட்டது.

அந்தப் பெரிய வீட்டில், ஆள்நடமாட்டமற்று அமைதி எந்நேரமும் கோயில் கொண்டிருந்த சூழலில், தன்னந் தனியனாய் பொழுது போக்க நேரிட்டு விட்ட அவனுக்கு இப்படி ஒரு உள்ளுணர்வு எப்போதுமே சிறகடிப்பது உண்டு.

பார்க்கப் போனால் யார்தான் காத்திருக்கவில்லை இந்தவாழ்க்கையிலே? பஸ்சுக்காக தபாலுக்காக பணத் துக்காக வேலைக்காக திருமணத்துக்காக இவ்வாறு எது எதுக்காகவோ மனிதர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே

அறிந்தோ, அறியாமலோ - அவரவர் சாவுக்காகக் காத்திருக்கிறார்கள் தானே அல்லது மரணம் ஒவ்வொருவரது கால முடிவுக்கும் காத்திருக்கிறது என்று சொல்லலாமே!...

தனியாக இருக்கும் அவன் மனம் இந்த ஒரே எண்ணத்தை அடிக்கடி ஒட விடும்.

மனம் விசித்திரமானது தான். இருண்ட எண்ணங்கள் மண்டும் குகையாக இருக்கிற அதுவே ஒளிக் கோடுகள் நீத்திக் களிக்கிற விசால வெளியாகவும் தோன்றுகிறது. சுடர்க் கோளங்கள் சுழலும் ஆகாயமாகத் தோன்றும் அதுவே முத்துக்களும் விந்தைச் சிப்பிகளும் சிக்கலான கொடிகளும் விகார ஜந்துக்களும் விதம் விதமான ஜீவராசிகளும் நீந்திக் களிக்கும் ஆழ்கடலாகவும் தோற்றம் காட்டுகிறது. வண்ண மலர்கள் பூத்து மணமும் ஒளியும் வீசுகிற வனம் போலவும் அது விளங்குகிறது. சில சமயம் அர்த்தமற்ற கலவரத்தையும் தெளிவற்ற குழப்பத்தையும் காரணமில்லா பயத்தையும் இனம் புரியாத சோகத்தையும் தாங்கிக் குமைகின்ற மனம் சில