பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 89

ஆகவே, ராமலிங்கம் பெருமூச்சு உயிர்ப்பது தவிர வேறு வழி அறியாத நிலையில் இருந்தான். அவன் வீட்டுக்காரி செல்லம்மா எரிந்து விழுந்த போதும், வெடுவெடுத்த போதும், அவன் பிடிச்ச பிள்ளையார் மாதிரி இருக்க முடிந்ததே தவிர, அவளை சாந்தப்படுத்தும் விதத்தில் எதுவும் சொல்ல. முடியவில்லை.

ஆமா. வேலையை விட்டுப் போட்டேன்னு சொல்லிக் கிட்டு திண்டங்காளை மாதிரி வந்து நிக்கிகளே. இனிமே வீட்டுலே அடுப்பு எப்படிப் புகையுமாம்? முதலாளி என்னைக் குத்தான் ஏசிப் பேசலே? அவருக்கு அதே வழக்கமாப் போச்சு. உங்களுக்கு இப்போ மட்டும் ஏன் ரோசம் பொத்துக்கிட்டு வந்திட்டுதோ? என்று தொடங்கி அவள் கொடை கொடுக்க’ லானாள்.

இனி இதுக்கு ஒரு முடிவே இருக்காது என்றுதான் ராமலிங்கம் நினைத்தான். பெரு மூச்செறிந்தான். நடந்ததை நடந்தபடி சொன்னால் இவள் இப்படி பேசத் துணியமாட்டாள் என்று அவன் நிச்சயமாக நம்பிய போதும் அதை அவளிடம் சொல்ல அவனுக்கு மனசு வரவில்லை.

முதலாளி காமாட்சியா பிள்ளை கண்டபடி பேசக் கூடியவர்தான். அவரிடம் வேலை பார்க்கிறவர்களை அவர், அல்ப விஷயங்களுக்கெல்லாம், தாறுமாறாகத் திட்டித்தீர்ப்பார். ராமலிங்கத்தையும் எவ்வளவோ ஏசிப் பேசியிருக்கிறார்தான். ‘சவத்துப் பயலுக்குப் பொறந்த பயலே அநாதைப் பயலே’ ‘எச்சிப் பொறுக்கி என்று ஆரம்பித்து என்னென்னவோ சொல்லியிருக்கிறார். ஒன்றிரண்டு தடவை தேவடியா மகனே! என்று கூடத் திட்டியிருக்கிறார். தீவட்டித் தடியா, சோம்பேறிக் கழுதை, முட்டாப் பய புள்ளே என்பதெல்லாம் அவர் வாயில் சர்வசாதாரணமாக வெளிப்படும் வார்த்தைகள்,