பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 : புண்ணியம் ஆம் பாவம்போம்!

வாய் வீச்சர்களைவிட, சொல்லடுக்கு மேஸ்திரிகளைப் பயன்படுத்தினால் நிரந்தரமான நீடித்த பலன் ஏற்படக் கூடும் என்று அருளானந்த மூளை மின்வெட்டியது. ஆகவே அவர் வார ஏடு ஒன்றும், நாளிதழ் ஒன்றும் துவக்கினார்.

ஏமாந்தவர்கள் மிகுந்திருப்பர், எளிதில் ஏற்றம் பெற்று விடலாம்; ஏன் பணம் அதிகம் செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது. அதனால், ‘பேனாக் கொம்பர்களையும், எழுத்து பீரங்கிகளையும் அவர் தன் பக்கம் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்களுக்கு பணம் அதிக அளவில் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுமே!

‘கற்றுக் குட்டிகளையும், பள்ளியிலிருந்து வெளியுலகில் வந்து திசை தெரியாது விழித்து நிற்கும் பையன்களையும் பேனா வீரர்களாகவும் எழுத்து மன்னர்களாகவும் மாற்றி விட முயன்றார் அவர்.

வெற்றி சுலபத்தில் கிட்டாது எனப் புரிந்ததும், ‘மக்களுக்கு எது தேவை என்பது எமக்குத் தெரியும்; அதை எல்லாம் அள்ளிக் கொடுப்போம் என்று திட்டம் தீட்டினார்.

அக்கப்போர், வம்பளப்பு, காமப் பேச்சு, செக்ஸ் விவகாரங்கள், கொலை கொள்ளை குடிகெடுத்தல் வகையரா பற்றிய சூடான விஷயங்கள்- இவைகளைப் பற்றிப் பேசுவதில் தான் சாதாரண மக்கள் காலத்தையும் கருத்தையும் செலவிடுகி றார்கள். அவர்களுக்கு சிந்தனைக்கு வேலை கொடுக்கும் விஷயங்கள் பிடிக்காது. சும்மா பொழுதுபோக்கவும், பேசிச் சிரிக்கவும் நிறைய விஷயங்கள் தேவை. அவற்றை நாம் தருவோம் என்று அருளானந்தர் தீர்மானித்தார். அவருடைய பத்திரிகைகள் புத்துயிரும் விறுவிறுப்பும் பெற்றன.