பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் - பெருமாள். சாதாரண மனிதன்.

அவ்வேளையில் அசாதாரண மான சூழ்நிலையில் தனித்து விடப்பட்டிருந்தான்.

அதனாலேயே அவன் உள்ளம், இனம்புரிந்து கொள்ள முடியாத உணர்வுகளினால் கனமேறிக் கொண்டிருந்தது. ஒருவித பயம், குழப்பம், அழுத்தும் சோகம், ஏதோ ஒரு வேதனை கவிந்து, கணத்துக்குக் கணம் பாரமாகி வந்தன.

அவன் பார்வை ஒரு மிரட்சியுடன், மேலும் கீழும்: அங்கும் இங்கும், ஏறி இறங்கிப் புரண்டு அலைபாய்ந்தது. அவன் கண்களில் பட்டனவெல்லாம் அவனை அச்சுறுத்தின.

மலைகள். எல்லாப் பக்கங்களிலும் மலைப்பகுதிகள். விரிந்து பரந்து கிடந்தன. ஓங்கி நிமிர்ந்து நின்றன. முண்டும் முடிச்சுமாய் முகடுகள் தொங்குவனபோல் தென்பட்டன. ஒருபுறம் விண்ணைத் தொடமுயலும் உயர் சுவர் வளைந்து நெளிந்து சென்றது, பாதை சற்றுத் தள்ளி சரிவாக இறங்கிக் கிடந்தது மலை. அதை ஒட்டிப் பெரும் பள்ளம். நெடுகிலும் உயர் மரங்கள். பச்சை செறிந்த மரத்தலைகள், வகை வகைப் பூக்கள் காடாய் அடர்ந்து வளர்ந்த செடிகள், கொடிகள்.