பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 67

அவனது உள்ளம் கலங்கியது. கைகள் நடுங்கின. தேகத்தில் சிறு பதட்டம். - -

குற்றவாளி மேடைமீது ஏறி நின்றான். அவன் முகத்தை மறைத்து ஒரு கறுப்புத் துணி விழுந்தது. -

‘நல்ல வேளை. துணி இல்லாவிட்டால், இவன் முகம் என்னைக் குறை கூறும். கழுத்தைக் கயிறு இறுக்க இறுக்க, விம்மிப் புடைக்கிற நரம்புகளும், கோணும் உதடுகளும், பிதுங்கும் கண்களும் - அம்மா, காணச் சகிக்காது. என்னைப் பழிவாங்கத் துடிப்பவைபோல, பயமுறுத்த முழிப்பவை போல, சே, நினைக்கவே பயமாயிருக்கிறது...’

தன்னால் இது ஆகாது என்று சொல்லி விடலாமா என்று எண்ணினான் மறுபடியும். ஆனால் வேளை தவறி விட்டது. இனி முடியாது...

அதிகாரம் சைகை செய்தது. அவன் இதயம் துடிக்க, கைகள் நடுங்க, தனது வேலையைச் செய்தான்.

குற்றவாளியின் கால்கள் நிற்கும் தளம் இழந்தன. ஆடின. அவனே ஆடித் தொங்கினான், கயிற்று முடிச்சு கழுத்திலே இறுக்க. -

ஊசலிடும் அவனைப் பார்க்கத் திராணியில்லாமல், அவன் - கொலைக்குத் துணைபுரிவதைப் பிழைப்பாக ஏற்றுக் கொண்டு அல்லாடிய அவன் தலை குனிந்தான். அவன் தலை கொதித்தது. உடல் கொதித்தது. உள்ளமும் கொதித்தது.

தான் கால் பதித்து நின்ற இடமே பெயர்ந்து விழ, தானே அந்தரத்தில் தொங்குவதாக ஒரு நினைப்பு... அவன் தலை சுழன்றது. அவன் சமாளித்து நிற்க முயன்றான். அவன் காதருகிலே நீரருவி பொங்கிப் பாய்ந்து விழுவது போல் பேரோசை எழுந்தது... அவன் தள்ளாடி விழுந்தான்.