பக்கம்:புதிய கோணம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. புதிய கோணம்

அடைகின்ற அதே நேரத்தில் உடம்பின் மற்றொரு பகுதியில் மற்றொரு வடிவில் அக்கட்டி வெளிப்படுமாறு போல, மனிதனிடத்திலுள்ள அகங்காரமும் ஒரு நிலையில் போக்கப்பெற்றால் மற்றொரு நிலையில், மற்றொரு வடிவில் தலைதூக்கி நிற்கக் காண்கின்றோம்.

இக்கருத்தை வலியுறுத்த வந்த சைவ சமயத்தார்கள் இந்த ஆணவமாகிய மலத்தை (குற்றத்தை) ஒருசேர அழித்துவிட முடியாது என்றும், அதனை அடக்கி வைத்திருப்பதே ஒல்லும் என்றும் கூறியுள்ளனர். அம்மட்டோடு இல்லாமல், உயிர்களைச் சகலர் என்றும், பிரளயாகலர் என்றும், விஞ்ஞானகலர் என்றும் மூன்று பகுப்பாகப் பிரித்து,

'ஆணவம்', 'கன்மம்', 'மாயை' என்ற மூன்று மலங்களையும் உடையவர் 'சகலர்’ என்றும், 'ஆணவம்', 'கன்மம்' என்ற இரண்டைமட்டும் பெற்றவர் பிரளயாகலர் என்றும், 'ஆணவ'த்தை மட்டும் பெற்றவர் விஞ்ஞானகலர் என்றும் கூறுவர். இப்பிறவியின் சிறப்பு என்னவென்றால், மானிட உயிர் வளர்ச்சியில் மிக உயர்ந்த நிலையை அடைகின்ற பொழுதுகூட, ஆணவத்திலிருந்து மனிதன் நீங்குமாறு இல்லை. எனவே, அழிக்க முடியாத அந்தக் குற்றத்தை உள்ளவாறு உணர்ந்து ஒரு மனிதன் அதனை அடக்கி ஒடுக்கிக்கொள்ளக் கூடுமேயானால் அவன் முழுத்தன்மை பெற்ற மகாத்மாவாக ஆகிவிடுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/12&oldid=1390126" இலிருந்து மீள்விக்கப்பட்டது