பக்கம்:புதிய கோணம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தி இயக்கமும் இலக்கியமும் 139

அமையாமல், “இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ?’ என்று பேசுகிறான் என்றால், பக்தி நிலையில் ஈடுபட்டவர்கள் செயலை இந்த நாட்டு மக்கள் கண்ட முறையே வேறு என்பதை நன்கு அறிதல் வேண்டும்.

பக்தி நிலையில் ஈடுபட்டவர்கள் “தன்பரிசும், வினை இரண்டும், சாரும் மலம் மூன்றும்’ (பெ.பு:803) ஆக அனைத்தையும் துறந்து அன்பே வடிவாய் இருப்பராதலின் அவர்கள் செய்கின்ற செயல்களை இறைவன் செய்கின்ற செயல்களாகவே இந் நாட்டவர்கள் கருதினார்கள். ஆதலால்தான் அந்த அடியார்கள் செய்த செயலின் அருமைப்பாட்டை எடுத்துக்கூற வந்த பக்தி இலக்கியத்தை ஈடு இணையற்றதாகக் கருதினார்கள். ஏனைய எந்த இலக்கியமாயினும் அறிவின் துணைகொண்டு சிந்தித்து செய்யக் கூடியதாகும். ஆனால், பக்தியை உணர வேண்டுமானால், அல்லது அனுபவிக்க வேண்டுமானால் அறிவைக் குறைத்து, உணர்வைப் பெருக்கித்தான் அதனை அனுபவிக்க முடியும். அன்பர்கள் பெற்ற இந்த அனுபவத்தைக் கவிஞன் ஒருவன் இலக்கியத்தில் வடிக்க வேண்டுமேயானால் அவனும் ஒரு பக்தனாக மாறினாலொழிய இதனைச் செய்ய இயலாது. ஆதலால்தான் பக்தர்கள் பெற்ற பக்தி அனுபவத்தை புறத்தே நின்று கண்டதுடன் நில்லாமல் அகத்தே அவர்கள் அனுபவித்தது போலத் தாமும் அனுபவித்து அவர்களே பாடியது போலப் பாடிய சேக்கிழாரின் பாடலை ஈடுஇணையற்றதாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/147&oldid=659852" இலிருந்து மீள்விக்கப்பட்டது