பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

99


உருக்கமாகப் பேசுவது உலக இயற்கை. ஆனால் செய்முறை எப்படி? ஒருவர் இறந்து போனால்?

ஊரெல்லாம் கூடுவர். சத்தமிட்டு அழுவர். இதுவரை அழைத்த பெயரை நீக்கிவிட்டு பிணம் என்று பேசுவர். அவசர அவசரமாகச் சுடுகாட்டுக்கு அனுப்புவர். சுடுவர். பிறகு?

நீரினில் மூழ்கி நினைப்பொழிவர்.

ஆமாம்! மறந்தே போய் விடுவார்கள் இதுதான் மனித சுபாவம்.

மனித சுபாவம் எல்லாம் தன்னலம். சுயநலம். சுயகெளரவம், சுயலாபம். சுயதுரோகம்.

அதனால் பந்தம் வேண்டாம். ஏனெனில் அது சுடும் தீப்பந்தம். பாசம் வேண்டாம். அது கள்ளமான ஆபாசம். கடுமையான மோசம். நீசம்.

சாகும் வரை சுகமாக வாழ விரும்பினால் உறவை சாதாரணமாக நினைக்க வேண்டும் அதை உயிர் என்று உருகினால் பூதாகரமான விளைவுகளே பூகம்பமாய் கிளம்பும். இதுதான் காலங்காலமாக நடந்து வருகிற கொடுமை. கொடுமைக்குள் சிக்கிக் கொள்வது கொடுமையல்லவா!


106. பழையன கழிதலும் புதியன புகுதலும்

பழைய பொருட்களை கழித்து விட வேண்டும். புதிய புதிய பொருட்களை புகுத்தி விட வேண்டும். இது மக்களிடம் உள்ள, மாறாத குணம், மறையாத பண்பு. மனிதர் செய்தால் இதற்கு செயற்கை என்ற பெயர். உலகில் இது போல் தானே நிகழ்ந்து கொண்டால், இதற்கு இயற்கை என்று பெயர்.