பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

111


கந்தகம் எப்போது கிடைக்காது? என்ற கேள்விக்கு சித்தர் ஒருவர் இப்படிப் பாடி வைத்திருக்கிறார்.

அகம் மிகுந்தவர் கந்தம் அறிந்திலரே!
அகம் மகிழ்ந்தவர் கந்தகம் அறிந்தவரே!

கந்தகம் என்பது என்ன? தனக்குள்ளே தன்னைப் பார்த்து, தானாய் தெளிந்து வானாய் உயர்ந்து நிற்கும் உயர்ந்த நிலை.

சித்து என்பது அறிவு. சித்தம் என்பது அறிவைப் பெருக்கும் ஆன்மீக பீடம். சித்தத்தை செம்மைப் படுத்தி வாழ்வதுதான் கந்தக வாழ்க்கை.

சித்தமிலா வழி சீச்சி வழி
சித்தமுறும் சீவ வழி சீர்வழியே
எதற்கு இந்த கந்தக வாழ்க்கை?

எப்படியெல்லாம் வாழ்வது என்பது சீசீ என்று அருவெறுக்கும் வாழ்க்கை. இப்படித்தான் என்று வாழ்வது சீலம் மிகுந்த வாழ்க்கை. இருக்கும் காலம் வரை, நோய் நொடி, இல்லாமல், துன்பம் இல்லாமல், சுகமாக வாழ்வதற்காகத்தான். அந்த வாழ்வுதான் கந்தக வாழ்வாகும்.


114. அமர்க்களம்

வெற்றிகரமாக ஒரு காரியத்தை ஒருவர் செய்து விட்டால், அவரை அமர்க்களப்படுத்தி விட்டார் என்று பேசிப் புகழ்வார்கள்.

அமர்க்களமாக அந்தக்கூட்டம் இருந்தது என்று காரசாரமான தன்மையை குறிப்பார்கள்.