பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

117


மனைவி என்ற சொல்லை உச்சரிக்கும் பொழுது ‘வி’ என்ற எழுத்தை நாம் நம்மையறியாமலேயே ‘வீ’ என்று ஈகார ஒலியால்தானே சொல்கிறோம். அந்த ‘வீ’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

மலரின் நிலையை விளக்கிட வந்த புலவர்கள் செடியில் தோன்றத் தொடங்கியதை ‘அரும்பு’ என்றார்கள். முளைத்து முட்டிக் கொண்டு வருவதை ‘மொட்டு’ என்றார்கள். தேன், மணம், நிறம் எல்லாவற்றையும் வெளிக் கொண்டு வர பொழுது பார்க்கிறது அது என்பதால் அதனை ‘போது’ என்றார்கள். காலம் பார்த்து மலர்ந்ததை ‘மலர்’ என்றார்கள். மலர்ந்த மலரை சிறிது நேரம் கழித்து ‘வீ’ என்றனர்.

அது போலவே மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேதை, பெதும்பை, பேரிளம் பெண் என்று பெண்ணின் நிலையையும் ஏழு வகையாகப் பிரித்துப் பாடியிருக்கிறார்கள். உடலால் மலர்ந்திருந்து, வாழ்க்கைக்காகக் காத்திருந்து, வாழ்வுக்குத் துணையாக ஆணுக்குப் பெண் வருவதால்தான் ‘துணைவி’, ‘மனைவி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

மனைவியை வடமொழியில் ‘சம்சாரம்’ என்பர். இந்த வடமொழிச் சொல்லுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? சம் என்றால் நல்ல என்று அர்த்தம். சாரம் என்பது நல்லவைகளிலிருந்து நல்லவைகளைப் பெறுதல் என்று பொருள் தரும். நல்லவைகளிலிருந்து நல்லனவற்றை வாழ்க்கையில் நிறையப் பெறுவதைத் தான் சம்சார சாகரம் என்கிறார்கள்.