பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


122. பகுத்தறிவு என்றால்?

பகுத்தறிவு வாதி என்பார்கள். அவரையே நாத்திகவாதி என் பார்கள். பகுத்தறிவுக்கும், நாத்திகத்திற்கும் ஆத்திகத்திற்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை?

நாத்திகம் பேசுவோரை பகுத்தறிவுவாதி என்பது தான், நடைமுறை வழக்காகி விட்டது.

இயற்கையை உணர்வதற்காக படைக்கப் பட்டது தான் நமது கண்கள், காதுகள் போன்ற ஐம்புலன்கள்.

புலன்களை Sense organs என்பார்கள். அத்தகைய சிறப்புப் புலன்கள் இயற்கையை உணர்ந்து கொள்கிற போது ஏற்படுவது உணர்வு (Sense)

உணர்வுகளை ஐம்புலன்களும் தொடர்ந்து தவறாமல் தருகிறபோது, அதனைக் குறிக்கவே Common Sense என்றனர். அதாவது நல் உணர்வு என்றனர். அப்படி இல்லாததை Non Sense என்றனர்.

ஆக, புலன்களால் பெறுகிற உணர்வுகள், மேலும் மேலும் பெருகுகிறபோது, அறிவு ஏற்படுகிறது. அறிந்து கொள்வதின் ஆதிக்க உணர்வே அறிவாகிறது.

அறிவு அதிகமாக ஆக, அதைப் பகுத்துத் தெரிந்து கொள்வதைத்தான் பகுத்தறிவு என்கிறோம்.

அப்படியானால், பகுத்தல் என்றால் என்ன?

பகுத்தல் என்றால் வகைப்படுத்துதல், வகுத்துத் தெளிவாய்க் கூறுதல், கோது நீக்குதல் என்று பொருள் காண்கிறோம்.